search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பட வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் பலூன் இயக்குனர்
    X

    பட வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் பலூன் இயக்குனர்

    பலூன் படம் வெற்றி பெற்றிருந்தாலும், அதை கொண்டாடும் சூழ்நிலையில் நான் இல்லை என்று இயக்குனர் சினிஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. இப்படத்தை சினிஷ் இயக்கியிருந்தார். யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள்.

    இந்நிலையில் இயக்குனர் சினிஷ் படம் வெற்றி ஆனல், நான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இப்படம் குறித்து டுவிட்டரில் சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். 

    அதில், ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை.

    சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் எனது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. இயக்குனர், நாயகன், நாயகி, துணை நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என இப்படத்தில் பணியாற்றியவர்கள் என யார் இந்த நஷ்டத்துக்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். திரைத்துறை என்பது கடின உழைப்பை செலுத்துவதற்குத் தயாராக உள்ளவர்களுக்கான களம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்து, அதன்பின்னர் வேறுமாதிரியான முகத்தை காட்டுகிறார்கள். அண்மையில் தயாரிப்பாளர் ஒருவர் தனது இழப்பு குறித்து புலம்பினார். ஆனால், யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நிகழ்வதை நான் விரும்பவில்லை.

    எனது துணிச்சலையும், உண்மையையும் நான் மதிக்கிறேன். அதேவேளையில் இந்த வார்த்தைகளால் எனது தொழில் பாதிக்கப்படும் என்றாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஒரு முதலீட்டாளராக எனது பணத்தை இழப்பதன் வலி எனக்குத் தெரியும். என்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. தேவைப்பட்டால் அதை வெளியிடவும் நான் தயாராக இருக்கிறேன்.

    இத்திரைப்படத்தின் நஷ்டத்துக்கு காரணமானவர்கள் தாமே முன்வந்து, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட வேண்டும். 

    இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சினிஷ்.

    இயக்குனர் சினிஷ் யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி தற்போது சினிமா உலகில் சர்ச்சையை எழும்பியுள்ளது.
    Next Story
    ×