search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    போதை பொருள் வழக்கில் நடிகை சார்மி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது எடுத்த படம்.
    X
    போதை பொருள் வழக்கில் நடிகை சார்மி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது எடுத்த படம்.

    போதை பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான சார்மியிடம் போலீசார் தீவிர விசாரணை

    போதை பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான நடிகை சார்மியிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தியது.
    தெலுங்கு பட உலகின் நடிகர்-நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நடிகர்கள் தருண், நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் உள்ளிட்ட 12 பேரின் பெயர்களை அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் அவர்கள் 12 பேருக்கும் தெலுங்கானா மாநில கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இவர்களில் இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் தருண், நவ்தீப், உள்பட 6 பேர் சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்து விட்டனர்.

    ஆனால், நடிகை சார்மி வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து, 26-ந் தேதி (நேற்று) தான் விசாரணைக்கு ஆஜராவேன் என சார்மி அறிவித்தார். அதோடு தன்னை பெண் அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும் என ஐதராபாத் ஐகோர்ட்டில் சார்மி வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, சார்மியை பெண் அதிகாரிகளை கொண்டு மட்டுமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை 9.45 மணியளவில் சார்மி சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். மாலை 4.45 மணிவரை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடிகை சார்மி, தன்னை விசாரணைக்கு அழைத்து வந்த போது போலீஸ்காரர் ஒருவர் தன் மீது காரணம் இன்றி கை வைத்ததாக குற்றம் சாட்டினார்.



    சீனிவாச ராவ் என்ற அந்த போலீஸ்காரர் சார்மியுடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்ளும் நோக்கத்தில் அப்படி நடந்து கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த போலீஸ்காரர் தனது தவறுக்காக சார்மியிடம் மன்னிப்பு கேட்டார்.

    விசாரணையை முடித்துக்கொண்டு சார்மி புன்முறுவலுடன் வெளியே வந்தார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வெளியே திரண்டிருந்தனர். சார்மி அவர்களை பார்த்து கையசைத்துவிட்டு, காரில் ஏறி சென்றார்.

    அதே சமயம் சினிமாகாரர்களுக்கு என தனிச்சட்டம் வேண்டாம் என நடிகரும், இயக்குனருமான போசானி கிருஷ்ண மோகன் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே, இந்த போதை பொருள் வழக்கில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மைக் கமின்தா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இவர்தான் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் நடிகை முமைத்கான் இன்று(வியாழக்கிழமை) சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகிறார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×