search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதி குத்தகைதாரர் கைது"

    • விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் கண்ணிமைக்கும் நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
    • விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    பெரியபாளையம்:

    சென்னை அயனாவரத்தில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆவார். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் சனிக்கிழமை மாலை பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர். இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கினர். ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே ரமேஷ் குடும்பத்தைச்சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான நித்திஷ் (10) என்பவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் நித்திஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலை ரமேஷ் குடும்பத்தினர் நித்திஷ் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் பெரியப்பாளையம், அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜசேகர் (45) என்பவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    ×