search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் இயக்க தடை"

    • விபத்துக்கள் எதிரொலியாக கல்லட்டி சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசாரின் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து தலைக்குந்தா, கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதேபோல் முதுமலை, மசினகுடி, கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது.

    36 கொண்டை ஊசி வளைவு கொண்ட செங்குத்தான மலைப்பாதை என்பதால் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வெளிமாநில வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2-ம் தேதி இரவு சென்னையில் இருந்து சுற்றுலா வேனில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ஊட்டிக்கு வந்தனர்.

    தொடர்ந்து ஊட்டியில் இருந்து மசினகுடி செல்வதற்காக கல்லட்டி மலைப்பாதை 13-வது கொண்டை ஊசி வளைவில் வேன் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பெண் பலியானார். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் வினோத் குமார், அவரது உதவியாளர் ஜோசப் ஆகியோரை கைது செய்தனர். விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இனி வரும் நாட்களில் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கும், முதுமலையிலிருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு வெளி மாநில வாகனங்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு, மாவனல்லா, கல்லட்டி, தலைக்குந்தா ஆகிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்

    ×