search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடிகள் வீடு"

    • ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்

    செங்குன்றம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். ரவுடிகள் பட்டியலை சேகரித்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் சோழவரம் அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் முத்துசரவணன், சதீஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பெரும்பாலான ரவுடிகள் தங்களது செயல்களை குறைத்து தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ரவுடிகளை அவர்களது செயல்பாடுகளை பொறுத்து ஏ, பி, சி என்று 3 பிரிவாக பிரித்து உள்ளனர். இதில் மொத்தம் சுமார் 1500 ரவுடிகளின் பெயர்கள் போலீசாரிடம் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து நேற்று இரவு செங்குன்றம், அம்பத்தூர், எண்ணூர், மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் ராஜாராபர்ட், பரமானந்தம் மற்றும் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரவுடிகளின் பட்டியலுடன் அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை செய்தனர்.

    ஏ பிளஸ் ரவுடியான சுருட்டை வெங்கடேசன், குள்ள கார்த்தி, பாம்பு நாகராஜ், ஏ பிரிவை சேர்ந்த பாம் ராஜேஷ், அருண், இளந்தமிழன், தினேஷ் உள்ளிட்ட ரவுடிகள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று வேட்டை நடந்தது. 100 ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இரவு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது.

    சோதனையின் போது ரவுடிகளின் குடும்பத்தினரிடம், ரவுடியின் இருப்பிடம் மற்றும் தற்போது அவர்களது செயல்பாடுகள் பற்றி போலீசார் கேட்டறிந்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இந்த வேட்டையின் போது ரவுடிகள் யாரும் சிக்கவில்லை. எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரவுடிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும். அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் தொல்லை இருந்தால் பொதுமக்கள் போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×