search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூவர் குழு ஆய்வு"

    முல்லைப் பெரியாறு அணையை மத்திய நீர் வள ஆணையர் தலைமையில் மூவர் குழு ஆய்வு செய்தனர். #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த கடந்த 7.5.2014-ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணையினை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர் வள ஆணையர் தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும், கேரளா சார்பில் ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர். இக்குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் அவ்வப்போது அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு அது குறித்த அறிக்கையை மூவர் குழுவிற்கு சமர்பித்து வந்தனர்.

    தற்போது மூவர் குழுவின் தலைவராக மத்திய நீர் வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசு பிரதிநிதியாக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக அம்மாநில நீர் வள ஆதார அமைப்பின் செயலர் டிங்கு பிஸ்வால் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை அதிக அளவு பெய்ததால் பெரியாறு அணையின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து 136 அடியை எட்டியது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த வருடம் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அதன் பிறகு படிப்படியாக மழை குறைந்ததால் நீர் வரத்து சரிந்ததுடன் நீர் மட்டமும் குறைந்து வருகிறது. எனவே மழை காலத்தில் அணையில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு முடிவு செய்தது. இக்குழுவினர் இன்று பெரியாறு அணைக்கு வந்து ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    13 ‌ஷட்டர்களையும் இயக்கி சோதனை செய்ததுடன் அணையின் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றும் நீரின் அளவு ஆகியவற்றை அளவீடு செய்தனர். நீர் கசிவு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியதுடன் பேபி அணை, கேலரி பகுதிகளையும் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மூவர் குழு தலைமையில் இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழக அரசின் கோரிக்கையான தமிழன்னை படகை இயக்க அனுமதி, வல்லக்கடவு வழியாக பெரியாறு அணைக்கு மின்சார வசதி போன்ற பிரச்சினைகளை தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். #PeriyarDam

    ×