search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்"

    • ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது.
    • ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஜாம்நகரில் உள்ள விமான நிலையம் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. நாள்தோறும் 140 விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்கின.

    கடந்த 1-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரிக்காக மட்டும் ரூ.75 கோடி செலவிடப்பட்டது. 2-ம் நாளில் விருந்தினர்கள் அனைவரும் ஜாம்நகரில் உள்ள 3,000 ஏக்கர் வனத்தை சுற்றி பார்த்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    3-ம் நாளான நேற்று வந்தாரா வனப்பகுதியில் உள்ள யானைகளை பார்க்க விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாலையில் இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா, மகள் ஜஸ்வர்யாவுடன் பங்கேற்றார். நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ரித்தேஷ், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கத்ரீனா கயூப், ஜெனிலியா, ராணி முகர்ஜி, சோனா முகர்ஜி, நடாஷா பூனவல்லா, இயக்குநர் அட்லி உள்பட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    அதில், "அம்பானி குடும்பத்தின் திருமண விழா, செல்வம் மற்றும் அதிகாரத்தின் அருவருப்பான வெளிப்பாடு. நம் பிரபலங்களும் அங்கு போய் வெட்கமில்லாமல் பங்கேற்பது மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. வெகுஜன ஊடகமும் இந்த நிகழ்ச்சிக்கு ஓடியாடி உழைப்பது, எந்தளவுக்கு ஊடகங்கள் விலை போயிருக்கின்றன என்பதை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜகவினர் தனது X கணக்கில் மோடியின் குடும்பம் என பதிவிட்டு வருவதை பிரசாத் பூஷன் கிண்டல் செய்துள்ளார். தனது X பக்கத்தில் அம்பானி அதானியின் குடும்பம் தான் மோடி என்ற படத்தை பகிர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்று பதிவிட்டுள்ளார்.

    ×