search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் போராட்டம்"

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் சுமார் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி சர்வதேச எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேர் மற்றும் அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, உடனடியாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடற்கரையில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.
    • நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும், மீனவர்கள் யாரும் அங்கு செல்லாமல், தொடர்ந்து நேரு வீதியிலேயே ஏலம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்து கிராம மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் நகரின் மையத்தில் உள்ள நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் விடப்படும்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஏலம் விட்ட பிறகு, மீன்களின் கழிவுகள் சாலையிலேயே கொட்டிவிட்டு போனதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டது.

    ஆனால் நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும், மீனவர்கள் யாரும் அங்கு செல்லாமல், தொடர்ந்து நேரு வீதியிலேயே ஏலம் நடக்கிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குபேர் அங்காடி நவீனப்படுத்தப்படுவதால் மீன் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலை நவீன அங்காடிக்கு அரசு மாற்றியது.

    ஆனால் அதனை ஏற்காமல் கால அவகாசம் கேட்டு மீனவர்கள் தள்ளி போட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வல்லவன் காந்தி வீதியில் குபேர் மீன் மார்க்கெட் முன்பு கடந்த 1-ந் தேதி முதல் மீன் ஏலம் விடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 29-ந் தேதி மீன் ஏலத்தை நிறுத்திவிட்டு மீனவர்கள சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.

    இதனிடையே தடையை மீறி மீன் ஏலம் விட முயன்ற 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று மீனவர்கள் மீன்களை ஏலம் விடாமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் புதுவை முழுவதும் மீன் விற்பனையை நிறுத்தி விட்டு குபேர் அங்காடியில் உள்ள மீன் விற்பனை மையத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. மீன்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பல ஆண்டுகளாக. மீன் ஏலம் மற்றும் விற்பனை நடைபெறும் நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் நடத்துவோம். இல்லையென்றால், காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    • மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
    • தூத்தூர் மீன் விற்பனையாளர் சங்க தலைவர் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தார்.

    கிள்ளியூர்:

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்பவர் பைபர் வள்ளத்தில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது வள்ளம் முகத்துவாரத்தில் கவிழ்ந்ததில் பரிதாபமாக பலியானார்.

    துறைமுக முகத்துவாரத்தில் குவிந்துள்ள மண் குவியலை அப்புறப்படுத்தாதது தான் விபத்துக்கு காரணம் என்ற குற்றசாட்டுகளை முன் வைத்து தூத்துர், இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துறைமுகத்தைச் சுற்றியுள்ள சிறு, சிறு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக மணல் அள்ளும் எந்திரத்தை இறக்கியது. இந்த எந்திரம் மீனவர்களை ஏமாற்ற கண்துடைப்புக்காக இறக்கப்பட்டதாகவும், டிரஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு எந்திரம் மூலம் தான் மணல் அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி)முதல் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும், மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது

    இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனால் தடையையும் மீறி இன்று காலையில் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீன் விற்பனை சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம், மீன் வணிகர்கள் சங்கம், ஐஸ் வியாபாரிகள் சங்கம், டீசல் வியாபாரிகள் சங்கம் போன்றவை இணைந்து மீன்பிடி துறைமுகத்தில் தொடர் ஆர்ப்பாட்ட போராட்டம் துவங்கினர்.

    தூத்தூர் மீன் விற்பனையாளர் சங்க தலைவர் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தார். தேங்கா பட்டணம் துறைமுக வணிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திர ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில், பங்கு பணியாளர் ஜாண்பிரிட்டோ கலந்து கொண்டனர். முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் உட்பட பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்த வர்கள் மற்றும் மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம் மீனவர்கள் இன்று காலை வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.
    • மத்திய-மாநில அரசு அதிகாரிகள் வருகிற 4-ந் தேதி 6 மீனவர்களையும் விடுவிப்பதாக உறுதியளித்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லைதாண்டி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களையும் விடுவிக்க கோரி கடந்த 24-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். ராமேசுவரம் பஸ் நிலையப்பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    அப்போது கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் வழங்கப்படும் டீசலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 1500 பேர் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் ரூ.4 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீனவர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை நேற்றுடன் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை ராமேசுவரம் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர்.

    வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சகாயத்திடம் கேட்டபோது, மத்திய-மாநில அரசு அதிகாரிகள் வருகிற 4-ந் தேதி 6 மீனவர்களையும் விடுவிப்பதாக உறுதியளித்து உள்ளனர். எனவே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றார்.

    • கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், தைக்கால்தோணி துறை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளது.

    இங்குள்ள மீனவர்கள் விசைப்படகு, கட்டுமரம் மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால் மீன்வளம் குறைகிறது என்று கூறி மாவட்ட நிர்வாகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் ஒரு சில மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துகின்றனர்.

    இவர்களை கண்காணித்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களின் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதனிடையே கடலூர் அருகே சாமியார்பேட்டை பகுதியில் 30 கிராம மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மீனவ கிராமத்தினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று மீனவர்கள் சாமியார்பேட்டை கடற்கரையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தளம் வெறிச்சோடியது.

    • கோவிலை இடிக்ககூடாது என்று கூறி படகுகளை வழியில் நிறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • கொரோனா கால கட்டத்தில் இணைய வழியில் வழக்கு நடந்ததால் வழக்கு விவரம் குறித்து தங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

    சென்னை:

    சென்னை நொச்சிக் குப்பத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கங்கா பவானி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து கோவிலை இடிப்பதற்கு 2020-ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கோவிலை இடிப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி இன்று கோவிலை இடிப்பதற்காக ஜே.சி.பி. எந்திரத்துடன் அதிகாரிகள் நொச்சி குப்பத்துக்கு விரைந்து சென்றனர்.

    இதற்கு அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் கோவிலை இடிக்ககூடாது என்று கூறி படகுகளை வழியில் நிறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கொரோனா கால கட்டத்தில் இணைய வழியில் வழக்கு நடந்ததால் வழக்கு விவரம் குறித்து தங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

    மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்து தங்களது தரப்பு வாதத்தை சமர்ப்பிக்க குறிப்பிட்ட காலக்கெடு தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மீனவ மக்களுடன் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×