search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் புறக்கணிப்பு"

    • சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர்.
    • காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மண்டபம்:

    இந்திய, இலங்கை கடல் நடுவில் அழகிய குட்டித்தீவாக அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்தியாவின் எல்லையில் இருந்த இந்த தீவு கடந்த 1974-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அதிபர் பண்டாரநாயகாவுடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

    இருப்பினும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவினை இருநாட்டை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாடி கொள்ளலாம், தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்தி கொள்ளலாம் என்ற ஷரத்துகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    அதன்பேரில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்களும், பக்தர்களும் கொண்டாடி வந்தனர். இலங்கையில் கடந்த 1983-ல் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்தது. அதனால் இந்த திருவிழாவிற்கு முறையான அனுமதியின்றி ஒருசிலர் மட்டுமே சென்று அந்தோணியாரை வழிபட்டு வந்தனர்.

    தொடர்ந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்ததும் கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2002-ல் நிலைமை கட்டுக்குள் வந்ததும் கச்சத்தீவில் மீண்டும் திருவிழா தொடங்கியது. இருந்தபோதும் இந்திய மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2010-ம் ஆண்டு தமிழக மக்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்கள் கச்சத்தீவு சென்று திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

    பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல் இந்த விழாவில் இருநாட்டினரும் கலந்து கொள்ளலாம் என்பதால் இந்தாண்டு ராமேசுவரம், மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்கள் செல்ல பதிவு செய்திருந்தனர். இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தனர். இதை உறுதிப்படுத்தி கச்சத்தீவு திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேசுவரம் பாதிரியார் சந்தியாகு கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு கடிதம் அனுப்பினார்.

    கச்சத்தீவு செல்ல விசைப்படகு மீனவர்கள் புறக்கணித்த நிலையில் 17 நாட்டுப்படகுகளில் 302 மீனவர்கள் இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் விசைபடகு மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கச்சத்தீவு திருவிழா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல தடை விதித்தது. இந்த தடையை மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஒரு வேளை சமரசம் ஏற்பட்டால் கச்சத்தீவு செல்லலாம் என்ற அடிப்படையில் வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் துறைமுகத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று காலை குவிந்தனர். அவர்களுக்கு போலீசார் படகில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8 மணி வரை காத்திருந்த பக்தர்கள் படகுகள் எதுவும் கச்சத்தீவுக்கு இயக்கப்படாததால் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

    மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×