search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலத்தீவு கடல்"

    • ஒரு பொய் வழக்கு காரணமாக மாலத்தீவு சிவில் நீதிமன்றத்தால் கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • பணியாளர்களுக்கு உணவு, டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது தவறானது.

    சென்னை:

    கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ், கேரளாவை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் புரவலன் 1 என்ற சரக்கு கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.

    அந்த சரக்கு கப்பல் மாலத்தீவு துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

    மாலத்தீவு துறைமுகத்துக்கு வெளியே சுமார் 3 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இந்த சரக்கு கப்பல் கடந்த 13 மாதங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் அந்த கப்பலிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    இதுகுறித்து கேரளாவை சேர்ந்த நந்தகுமார் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கப்பலில் பணிக்கு சேர்ந்தபோது கப்பல் தூத்துக்குடிக்கு செல்ல திட்டமிடப்பட்டது. மேலும் மாலுமிகள் பணியில் சேருவார்கள். பின்னர் கப்பல் இந்தியாவுக்கு செல்லும் என்று கூறினார்கள்.

    ஆனால் 2 மாதங்கள் ஆகியும் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே என்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் இலங்கையை சேர்ந்த 4 பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.

    இப்போது மொத்தம் 7 பணியாளர்கள் உள்ளோம். ஆனால் கப்பல் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் படகுகளை நம்பியே வாழ்கிறோம். சரக்கு கப்பல் நிர்வாகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு புகாருக்கு பிறகும் நிர்வாகம் விளக்கம் அளிக்கும். அதன் பிறகு அமைதியாக இருந்துவிடும். கடந்த 13 மாதங்களாக சம்பளமும், சரியான உணவும் தராமல் அலைக்கழிக்கிறார்கள். தற்போது டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ் கூறும்போது, "எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கப்பலில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் என்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை" என்றார்.

    சமீபத்தில் நந்தகுமார் அளித்த புகாரை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து அமைச்சகம், கப்பல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னையில் உள்ள கப்பல் மாஸ்டரிடம் கேட்டது. இதையடுத்து கப்பல் மாஸ்டரின் வேண்டு கோளை ஏற்று கப்பல் நிறுவனம் பணியாளர்கள் கையெழுத்திட்ட பிறகு 60 நாட்களுக்கு ஆயிரம் டாலர் தருவதாகவும் சென்னை அலுவலகத்தில் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உறுதி அளித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் அஜீஸ் கூறும்போது, "ஒரு பொய் வழக்கு காரணமாக மாலத்தீவு சிவில் நீதிமன்றத்தால் கப்பல் கைப்பற்றப்பட்டு உள்ளது. பணியாளர்களுக்கு உணவு, டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது தவறானது. அவர்களுக்கு தேவையானதை வழங்கி வருகிறோம்.

    கப்பலை விடுவிக்குமாறு இந்திய அரசிடம் முறையிட்டு உள்ளோம். ஆனால் அது மாலத்தீவில் சட்ட வழக்குகளில் சிக்கி உள்ளது. கப்பல் குழுவினர் விரைவில் கப்பலை விட்டு வெளியேற உள்ளனர். அவர்களுக்கு வரும் நாட்களில் சம்பளம் தருவதாக உறுதி அளித்துள்ளோம்" என்றார்.

    ×