search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் மறியல்"

    • போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போராட்டம் காரணமாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மருதமலை அடிவாரம் அருகே பாரதியார் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரடி வகுப்பிலும், தொலை தூர கல்வி மூலமும் படித்து வருகின்றனர்.

    கல்லூரியில் நேரடி வகுப்பில் படிக்கும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில் 1500 மாணவிகள் விடுதியில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விடுதி மாணவிகள் இன்று காலை 150 பேர் திடீரென கல்லூரி முன்பு உள்ள கேட்டை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, தங்கள் பயன்படுத்தும் தட்டு, பக்கெட்டை வைத்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    மாணவிகள் விடுதியில் 1500 பேர் தங்கி படித்து வருகிறோம். இங்கு சரியான உணவு வழங்கப்படுவது இல்லை, தண்ணீரும் போதுமான அளவு வழங்கப்படுவது இல்லை, விடுதி முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து 4 மாதங்களாக வார்டன், சூப்பிரவைசர், பதிவாளரிடம் புகார் அளித்து வந்தோம்.

    மேலும் கல்லூரியில் உள்ள புகார் பெட்டியில் கடிதம் எழுதி போட்டோம். ஆனால் அந்த பெட்டி இதுவரை திறக்கப்படவில்லை. பாரதியார் பல்கலைகழகத்தில் 8 விடுதிகள் உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு 8 விடுதிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது 1500 மாணவிகளுக்கும் ஒரே இடத்தில் சமைக்கப்படுகிறது. இதனால் உணவு தரம் இல்லாமலும், உணவில் புழு, வண்டு உடன் பரிமாறப்படுகிறது. விடுதியில் உணவுக்காக ரூ.3000 முதல் 4000 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம்.

    நாங்கள் விடுப்பில் சென்றால் அந்த தொகையில் எந்த மாற்றமும் இல்லாமல் வசூலித்து வருகிறார்கள். ஆனால் உணவில் தரம் மட்டும் இல்லை. எனவே இதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டோம். உணவின் தரம், குடிநீர், நாங்கள் பயன்படுத்தும் தண்ணீர், விடுதியின் சுத்தம் ஆகியவற்றுக்கு எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×