search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வெள்ளம் புகுந்தது"

    • பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    தோளப்பள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர், போலியான சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.

    அதன்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணை குழு அமைத்து போலி ஜாதி சான்றிதழை கொடுத்து தேர்தல் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது முற்றிலுமாக தடைப்பட்டது.

    காமராஜபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல கட்டப்பட்ட கால்வாய் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீரோடு மழை நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கழிவுநீருடன் கலந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அணைக்கட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×