search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்"

    • விளாங்கோம்பை கிராமத்தில் 45 ஊராளி இன பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • டி.என் பாளையம் வட்டார கல்வி அலுவலகத்திலும், டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்திலும் விளாங்கோம்பை கிராம மக்கள் மேற்கண்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    டி.என்.பாளையம்:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அடுத்த கொங்கர் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்கோம்பை கிராமத்தில் நிரந்தரமாக ஒரு தொடக்கப் பள்ளியை தொடங்க வேண்டும் மற்றும் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் 40-க்கும் மேற்பட்டோர் டி.என்.பாளையம் அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து டி.என் பாளையம் வட்டார கல்வி அலுவலகத்திலும், டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்திலும் விளாங்கோம்பை கிராம மக்கள் மேற்கண்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:

    விளாங்கோம்பை கிராமத்தில் 45 ஊராளி இன பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கொங்கர்பாளையம் ஊராட்சியில் வினோபாநகர் வரை பஸ் போக்குவரத்து வசதியுள்ளது. வினோபா நகர் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் மலைக்கிராம பகுதிகளில் தரமான சாலை வசதியோ பஸ் போக்கு வரத்தோ இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்படு கிறோம்.

    மலைக்கிராம மக்கள் நகரப்பகுதிக்கு வேலைக்கு வந்து செல்லவும் ரேசன் பொருட்கள், இதர மளிகை பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை பயன்பாட்டிற்கு நகரப்பகுதிக்கு வந்து செல்ல அடர்ந்த வனப்பகுதி வழியாகவே அச்சத்துடன் இரு சக்கர வாகனத்தில் மற்றும் நடந்தே வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு களின் நடமாட்டம் மிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக விளாங்கோம்பை உள்ளதால் இந்தப் பாதையில் ஆள் நட மாட்டமே இருக்காது.

    இந்த விளாங்கோம்பை மலைகிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த வழியாக பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமாயின் அடர்ந்த வனப்பகுதியில் நான்கு காட்டாறுகளை கடந்து இந்த வனச்சாலையில் 8 கிலோ மீட்டர் பயணித்து வினோபா நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும்.

    இதன் காரணமாகவே இந்த மலைகிராமத்தில் உள்ள மாணவ- மாணவி கள் நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லாமல் இருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2007-ம் ஆண்டு பள்ளி குழந்தைகள் ஒரு சரக்கு வாகனத்தில் வந்து வினோபாநகர் நடு நிலைப் பள்ளியில் படித்த னர். 2010-ம் ஆண்டு காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.

    இதனால் பள்ளி குழந்தைகள் கல்வி தடைப்பட்டது. குடும்ப ஏழ்மை கருதி சில குழந்தைகள் பல்வேறு வேலைகளுக்கு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு இங்கு ஒரு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியும் கடந்த ஆண்டு மூடப்பட்டது. மூடப்பட்ட பள்ளியில் இருந்து மாணவ- மாணவி களை 20 பேரை வினோபா நகர் நடுநிலைப் பள்ளியிலும், 10 பேரை கொங்க ர்பாளையம் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்த்தனர்.

    ஒரு தனியார் சரக்கு வாகனம் மூலம் விளா ங்கோம்பை மலைக்கிராம மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர்.சில நாட்களுக்காக பெய்த கனமழை காரணமாக விளாங்கோம்பை வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் பாதை முற்றிலும் சிதலமடைந்து தற்போது எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஒரு தொடக்கப் பள்ளியை அரசு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த பகுதியில் பள்ளி இல்லை.

    எனவே, பள்ளிக்கல்வி த்துறை உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு விளாங்கோம்பை கிராமத்திலேயே நிரந்தரமாக ஒரு தொடக்கப் பள்ளியை தொடங்க வேண்டும் மற்றும் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×