search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலம் கழித்தல் இல்லாத"

    • மத்திய அரசின் தர ஆய்வுக்குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்த 104 பேர் பணி செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தூய்மை இந்தியா திட்டத்தில் தனி நபர் வீடுகளில் கழிப்பிடம் கட்டித்தரப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து பகுதிகளிலும் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தி கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படுகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 42 டவுன் பஞ்சாயத்து பகுதிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மண்டல உதவி இயக்குனர் அலுவலக (டவுன் பஞ்சாயத்துகள்) அதிகாரிகள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 42 டவுன் பஞ்சாயத்துகளில் 630 வார்டுகள் உள்ளன. இவற்றில் சுகாதாரம் சார்ந்த ஆய்வில் தனி நபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு உடனடியாக கட்டித்தரப்படுகிறது.

    இதன்படி கடந்த 2015–-16-ல் 5,264 தனி நபர் வீடுகளிலும், 2016–-17-ல் 11,104 வீடுகளிலும், 2017–-18-ல் 4,134 வீடுகள், 2018–-19-ல் 50 வீடுகளிலும் கழிப்பறை கட்டி தரப்பட்டது. இதற்கு ரூ.16.44 கோடி மானியம் வழங்கப்பட்டது.

    பின் நடத்திய ஆய்வில் கடந்த 2020-–21-ல் 50 கழிப்பறை ஒதுக்கீடு செய்து 47 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 2021–-22-ல் 282 தனி நபர் வீடுகளில் கழிப்பறை ஒதுக்கீடு செய்து 166 வீடுகளிலும், 2022–-23-ல் 585 வீடுகளுக்கு கழிப்பறை ஒதுக்கீடு செய்து 278 வீடுகளுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு பணிகள் நடந்து வருகிறது.

    இதன்படி 42 டவுன் பஞ்சாயத்துகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத டவுன் பஞ்சாயத்துகளாக மத்திய அரசின் தர ஆய்வுக்குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது.

    டவுன் பஞ்சாயத்து பகுதியில் கழிப்பிடங்கள் பயன்படுத்துதல், கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகளாக தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர்கள் 104 பேர் பணி செய்து உறுதி செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×