search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள் வெட்டி எடுப்பு"

    • ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் வருவாய்த்துறையின் அனுமதி இன்றி கல்லூரி முதல்வர் பங்காரு வலியுறுத்தலின் பேரில் 19 மரங்களையும், 3 மரத்தின் கிளைகளையும் வெட்டி எடுத்துவிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சேலம் நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரங்கள் இருந்தன. இந்த நிலையில் வருவாய்த்துறையின் அனுமதி இன்றி கல்லூரி முதல்வர் பங்காரு வலியுறுத்தலின் பேரில் 19 மரங்களையும், 3 மரத்தின் கிளைகளையும் வெட்டி எடுத்துவிட்டனர்.

    8 டன் எடையுள்ள மரங்களை ரூ.9 ஆயிரத்து120-க்கு விற்பனை செய்து அந்த பணத்தை கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

    கல்லூரி வளாகத்தில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் குறித்து புகார் வந்ததை அடுத்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, ராசிபுரம் வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று மரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

    கல்லூரி முதல்வர் பங்காருவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கல்லூரியில் இருந்த காய்ந்து போன மரங்கள் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்ததால் வெட்டப்பட்டதாகவும், வகுப்பு அறை பின்புறம் உள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகம் உள்ளன. அவை கழிவறை, வகுப்பு அறைக்குள் புகுந்து விடுவதாகவும் மாணவர்கள் நலன் கருதி மரங்களை வெட்டி எடுத்ததாகவும் அதிகாரிகளிடத்தில் கூறியதாக தெரிகிறது.

    வெட்டப்பட்ட மரங்களின் உண்மையான மதிப்பீடு வனத்துறையினர் மூலம் கண்டறியப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை வருவாய்த்துறையின் அனுமதி இன்றி வெட்டப்பட்டதால் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×