search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது ஆலை"

    • குடோனின் மேல் உள்ள ஓட்டை பிரித்து இறங்கி அங்கு விட்டுச் சென்ற மதுபாட்டில்களை எடுத்து ஓசியில் குடித்து வந்து உள்ளனர்.
    • சுமார் 200-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களும் சிதறி கிடந்தன.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த வரதாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை வளாகத்திற்குள் கடந்த 2013-ம் ஆண்டு போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.

    அப்போது கலால் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து போலியாக செயல்பட்டு வந்த மதுபான தொழிற்சாலை மற்றும் மதுபாட்டில்கள் இருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த போலி மதுபான குடோன் பூட்டியே கிடந்தது. அந்த குடோனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிதறிய பாட்டில்களை முறையாக பறிமுதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றதாக தெரிகிறது.

    இதனை அறிந்த மது பிரியர்கள் நள்ளிரவில் குடோனின் மேல் உள்ள ஓட்டை பிரித்து இறங்கி அங்கு விட்டுச் சென்ற மதுபாட்டில்களை எடுத்து ஓசியில் குடித்து வந்து உள்ளனர்.

    நாட்கள் செல்ல செல்ல குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தினந்தோறும் ஏராளமான போதை ஆசாமிகள் இந்த குடோனுக்குள் புகுந்து மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அதிக மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் வீட்டுக்கு வந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட போலி மதுபான குடோனுக்குள் புகுந்து போதை வாலிபர்கள் மதுகுடித்து செல்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சீல் வைத்த போலி மதுபான தொழிற்சாலைக்குள் சுவர் ஏறி குதித்து சென்றனர்.

    அப்போது அங்கு ஏராளமான காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தது. மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களும் சிதறி கிடந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்து அங்கேயே உடைத்து அழித்தனர். போதை வாலி பர்கள் எத்தனை நாட்களாக எவ்வளவு மதுபாட்டில்களை குடித்து காலி செய்தனர் என்று தெரியவில்லை. பணம் கொடுக்காமல் ஓசியில் தினந்தோறும் மதுகுடித்து ஜாலியாக இருந்து உள்ளனர். அவை போலி மது பானம் என்பதாலும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேல் ஆவதாலும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதா என்றும் தெரியவில்லை.

    இது தொடர்பாக குடோனுக்குள் புகுந்து போலி மதுபானங்களை குடித்து சென்ற மதுபிரியர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த குடோனுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.மேலும் திருவள்ளூர் மாவட்ட கலால் உதவி இயக்குனர் மாலா மது பாட்டில்கள் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    ×