search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா புஷ்கரம்"

    நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள்.

    இதற்காக அரசு சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் தாமிரபரணி நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தாமிரபரணி நதியில் புஷ்கர விழா கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் பல்வேறு இடங்களை சுற்றி பார்வையிட்டனர். புஷ்கர விழாவிற்காக தாமிரபரணி நதி கரையில் படித்துறைகள், தாமிரபரணிதேவி சிலை உள்பட பல அடிப்படை கட்டமைப்புகள் கட்ட வேண்டும் என்றும் துறவிகள் கூட்டமைப்பினர் அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் துறவிகள் கூட்டமைப்பு மற்றும் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பாக அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி நதியின் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட பூமிபூஜை இன்று காலை நடந்தது.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட துறவிகள் பூமி பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

    இதில் நாங்குநேரி வானமாமலை ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஜீயர், கொங்கு மண்டல நாராயணஜீயர், திருச்சி ஸ்ரீரங்கம் பவுன்புகரபுரம் ஜீயர், பெருங்குளம் செங்கோல் ஆதினம், துறவிகள் சங்க தலைவர் ராமானந்தா சுவாமிகள், நெல்லை பக்தானந்த சுவாமி மற்றும் எட்டெழுத்து பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பூமிபூஜையை நடத்தினர்.

    பின்னர் ஜடாயு தீர்த்தத்தில் தண்ணீர் தெளித்து பல்வேறு அடிப்படை பணிகளுக்கான தொடக்க விழாவையும் நடத்தினர்.

    இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லைக்கு வந்த தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விழா குறித்து பொதுமக்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.

    பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலம் புறப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஓசூர், ஒகேனக்கல், பென்னகரம் வழியாக சேலம் சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மல்லசமுத்திரம், திருசெங்கோடு, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தது.


    நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரதயாத்திரை ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

    அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம் வழியாக நேற்று மாலை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை வந்தடைந்தது.

    கோவிலில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடந்தது. பின்னர் அந்த சிலைகள் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டன. இந்த ரத யாத்திரைக்கு பக்தர்கள் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ரத யாத்திரை நெல்லை டவுன் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்தது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் சென்றது.

    இந்த ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சியில் தாமிரபரணி புஷ்கர கமிட்டி தலைவர் சுவாமி ராமாந்தா, செயலாளர் முத்தையா, ஒருங்கிணைப்பு குழு செயலாளர் குமாரராஜா, துணை தலைவர் ரத்தினவேல், பொருளாளர் வீரபாகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    ×