search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வருகை"

    • மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
    • தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    அதே நேரத்தில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

    இவர்களை தவிர ஊர்க்காவல் படையினர், சிறப்பு தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர். பிரதமர் மோடி 7 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். வருகிற 14-ந்தேதி 8-வது முறையாக மீண்டும் பிரசாரத்துக்காக வருகை தருகிறார்.

    ராகுல்காந்தி இன்று மாலை பிரசாரம் செய்ய உள்ள நிலையில் பிரியங்காவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களை தவிர தமிழக தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று முக்கிய பிரமுகர்கள் 240 பேர் போலீசாரின் வி.ஐ.பி. பட்டியலில் உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணத்தோடு ரவுடிகள் செயல்பட்டு வருகிறார்களா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்களை வேட்டையாட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் ரவுடிகளை போலீசார் பட்டியல் போட்டு கண்காணித்து வரும் நிலையில் 4 ஆயிரம் பேரிடம் எழுதி வாங்கி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தொடங்கி ஓராண்டு காலம் வரையில் எந்தவித தவறும் செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கியுள்ள போலீசார் ரவுடிகள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறையில் இருந்து வெளிவந்த ரவுடிகள் எத்தனை பேர்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உரிமம் பெற்று துப்பாக்கியை பயன்படுத்தும் அனைவரும் தேர்தல் நேரத்தில் அவைகளை ஒப்படைத்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 17 ஆயிரத்து 583 துப்பாக்கிகள் மாநிலம் முழுவதும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கி பணிகள் மற்றும் முக்கியமான அலுவலகங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு மட்டும் ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் இரவு-பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ×