search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் டாக்சி விபத்து"

    • மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
    • பிறந்தநாள் அன்று அதிகாலையில் மேற்கொண்ட பைக் டாக்சி பயணம் சேவிகாவின் உயிரை குடித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சேவிகா. 34 வயதான இவர் அழகு கலை நிபுணர் ஆவார். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு மேக்கப் போடும் பணியை சேவிகா செய்து வந்தார்.

    சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்ற அவர் வேலை முடிந்து மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தோழியின் வீட்டில் போய் தங்கினார். இன்று காலை 4 மணி அளவில் சேவிகா தனது பிறந்தநாளையொட்டி வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் வாழ்த்து பெற ஆசை ஆசையாக புறப்பட்டார்.

    மேற்கு மாம்பலத்தில் இருந்து சேவிகா பைக் டாக்சியை பதிவு செய்து அதில் பயணித்தார். தேனாம்பேட்டை வழியாக வியாசர்பாடி நோக்கி பைக் டாக்சி சென்றது.

    மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் சேவிகா அமர்ந்து பயணம் செய்தார். அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கம் அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேவிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    பிறந்தநாள் அன்று அதிகாலையில் மேற்கொண்ட பைக் டாக்சி பயணம் சேவிகாவின் உயிரை குடித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் விபத்தில் சிக்கி கீழே விழுந்தபோது சேவிகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

    இதில்தான் அவர் உயிரிழந்துள்ளார். சேவிகாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து உறவினர்களும், தோழிகளும் கதறி அழுதனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சேவிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற வாலிபர் ஆனந்தன் சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    சேவிகாவின் உயிரை பறித்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அந்த லாரியை போலீசார் தேடி வருகிறார்கள். டிப்பர் லாரி யாருக்கு சொந்தமானது? அதனை ஓட்டி வந்த டிரைவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×