search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராபிஷேகம்"

    • பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    உலகப் பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் வருகிற 3-ந் தேதி வருவதால், அவரது 1037-வது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

    சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் விழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜை, தீபாரதனை காண்பிக்கப்பட்ட பின்னர் பந்தல்கால் நடப்பட்டன. முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த

    நிகழ்ச்சியில் சதய விழாக்குழு தலைவர் து.செல்வம், துணைத் தலைவரும் மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.

    தொடர்ந்து 3-ந் தேதி காலை தேவாரநூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    தொடர்ந்து ராஜராஜ சோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர். அன்று இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெறவுள்ளது.

    ×