search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரணவ் ஜுவல்லரி"

    • தலைமறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.
    • வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி, சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.

    இந்த நகைக்கடை நிர்வாகத்தினர் அறிவித்த கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் நம்பி பல கோடி முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், முதிர்வுத் தொகையைத் தராத நகைக்கடை நிர்வாகத்தினர் திடீரென நகைக்கடைகளை மூடியதால் முதலீடு செய்தவர்கள் அந்த கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில், ரூ.100 கோடி வரையில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள அந்த மோசடி நிறுவனத்தில் நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடந்தி 22 கிலோ வெள்ளி, 1, 900 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 711 ரொக்கம் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி செய்தல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நகைக்கடை மேலாளர் நாராயணன் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தலை மறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்ற அனுமதியுடன் டிசம்பர் 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகாவை திருச்சி, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, மதுரை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

    அவரிடமிருந்து ரூ. 52,000 ரொக்கம் மற்றும் 2 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொகையை திருப்பி வழங்க மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெரும்பாலான சொத்துக்கள் அடமானத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை மீட்டு பறிமுதல் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.

    அதேபோன்று கடைகளுக்கு அட்வான்ஸ் கொடுத்த தொகை சுமார் ரூ.3 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆகவே அந்த தொகையையும் கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ரூ. 100 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் பறிமுதல் செய்ய இருக்கும் சொத்துக்களின் மதிப்பு வெகு குறைவாக உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    ஆகவே வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

    ×