search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபா போக் நாக்"

    • ஆர்னால்ட் டிக்ஸ் நேரடியாக களத்தில் இறங்கி ஆலோசனைகளை கூறி வந்தார்
    • மீட்பு பணி நிறைவடைந்ததும் நன்றி கூறி வழிபடுவேன் என கூறியிருந்தார் டிக்ஸ்

    உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன. இதன் ஒரு பகுதியாக, எண் 134 தேசிய நெடுஞ்சாலையில் (NH-134) சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

    சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொழில்நுட்ப ஆலோசனைக்கு சுரங்க கட்டுமான மேலாண்மையில் நிபுணரும், புவியியல் துறையில் பொறியாளருமான சர்வதேச புகழ் பெற்ற ஆஸ்திரேலிய பேராசிரியர் ஆர்னால்ட் டிக்ஸ் (Arnold Dix) என்பவரின் உதவி கோரப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் நேரடியாக களத்தில் இறங்கி ஆலோசனைகளை கூறி வந்தார்.

    மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்ட பெரிய இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து எலி வளை துளையிடும் சுரங்க தொழிலாளர்களை கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், மீட்கும் முயற்சி நடைபெற்றது.

    ஓய்வின்றி சிறப்பான முறையில் செயல்பட்ட இவர்கள் உதவியுடன் நேற்று மாலை 07:05 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த முயற்சிகளின் துவக்கத்தில் சுரங்க தொழிலாளர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான பாபா போக் நாகா (Baba Bokhnaag) என்பவருக்கு சிறு விக்கிரகம் அமைத்திருந்த இடத்தில் ஆர்னால்ட் டிக்ஸ் வழிபட்டார்.

    வெற்றிகரமாக பணியாளர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்றும் அப்போது மீண்டும் சென்று நன்றி கூறி வழிபட போவதாக டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    நேற்று 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட நிலையில் ஆர்னால்ட் டிக்ஸ் மீண்டும் பாபா போக் நாகா ஜி விக்கிரகத்தின் முன் மண்டியிட்டு நன்றி தெரிவித்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மீட்பு குறித்து டிக்ஸ் தெரிவித்ததாவது:

    தெளிவான சிந்தனையுடனும், பரந்த மனதுடனும் ஈடுபட்டால் எதுவுமே சாத்தியம்தான். அதைத்தான் நாங்கள் இங்கு செய்து காட்டி உள்ளோம். நானும் குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையில் 41 பெற்றோர்களுக்கும் அவர்களின் குழந்தைகள் பத்திரமாக கிடைக்க வழிவகை செய்ததில் பெருமிதம் கொள்கிறேன். சிக்கியவர்கள் அனைவரும் எந்த காயங்களும் இன்றி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே வீட்டிற்கு செல்ல முடியும் என தொடக்கத்திலேயே நான் தெரிவித்திருந்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகெங்கும் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

    ×