search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடத்திட்டங்கள்"

    • 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
    • தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், 50 சதவீதத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. உள்பட) பொதுவான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழக அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

    அடுத்த மாதம் 1-ந் தேதி (அக்டோபர்) தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ -மாணவிகள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை வருகிற 9-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களிடம் தேர்வு கட்டணம் ரூ.50-வுடன் 9-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தேர்வு தொடர்பான அறிவிப்பை மாணவர்கள் அறியும் வண்ணம் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×