search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாச போராட்டம்"

    • உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார்.
    • நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வந்தவர் தாராகவுரி (வயது 85).

    பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் சுதந்திரத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்தில் குடியேறினார். பின்னர் மும்பையில் ஆசிரியையாக பணியாற்றினார். திருமணமாகாத இவர் சில ஆண்டுகள் சென்னையில் வசித்து வந்தார்.

    வயது முதிர்வு காரணமாக தனித்து வசிக்க இயலாத நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

    இவர் தனிமையில் இருந்ததால் தனது பாதுகாப்பிற்காக நோபு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். தினமும் அதற்கு உணவு வைத்து அதனுடன் விளையாடி வந்தார்.

    இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தாராகவுரி இறந்தார். தனது எஜமானி இறந்ததை அறியாமல் அந்த நாய் சுற்றி சுற்றி வந்து மூதாட்டியின் உடல் மீது படுத்துக்கொண்டு அவரை எழுப்ப முயன்றது.

    அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் சமூக சேவகர் மணிமாறன் உதவியை நாடினர். இதையடுத்து சமூக சேவகர் மணிமாறன் தாராகவுரியின் உறவினர்கள் தெரிவித்த சம்பிரதாயங்களின் அடிப்படையில் சடங்குகளை செய்தார்.

    தகனம் செய்ய கொண்டு செல்ல முயன்ற போது நாய் உடலை எடுக்க விடவில்லை. பின்னர் வாகனத்தில் உடலை ஏற்றியபோது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது. அப்போதும் அந்த பெண்ணின் உடல் அருகே நின்று வாலை ஆட்டிக் கொண்டே தவித்தது.

    மேலும் சுடுகாடு வரை உடன் வந்த வளர்ப்பு நாய் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே பரிதவிப்புடன் இருந்தது. இதையடுத்து மூதாட்டியின் உடல் கிரிவலப் பாதையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    நாய் எஜமானியை பிரிய முடியாமல் பாசத்துடன் உடலை சுற்றி சுற்றி வந்த காட்சிகள் காண்போரை கண் கலங்க வைத்தது.

    மூதாட்டியின் உறவினர்கள் நாயை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    ×