search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் வேன்கள் தடை"

    • காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.
    • போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும், பட்டுச்சேலைக்கு பிரபலமானதாகவும் திகழ்கிறது. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், அத்திவரதர் உற்சவம் பிரசித்தி பெற்றது.

    இதனால் காஞ்சிபுரத்திற்கு சுற்றுலாவாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அவர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தினந்தோறும் லட்சக்கணக்கான வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா வேன், பஸ்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பஸ், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து வரும் நிலை உள்ளது.

    தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதியம் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சுற்றுலா பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள்.

    இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் நிலைமை மோசமாக உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் நடந்து செல்லும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பட்டுச்சேலை வாங்கி செல்ல விரும்புவார்கள். தற்போது உள்ள போக்குவரத்து புதிய விதியால் பட்டுச்சேலை கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த புதிய போக்குவரத்து விதிமுறையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது பட்டுச்சேலை கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    அவர்கள் கார் அல்லது ஆட்டோவை கூடுதலாக வாடகைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் நகருக்குள் மேலும் போக்குவர்தது நெரிசல் அதிகம் ஆகும்.

    சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தை தேர்வு செய்து வர இனி தயங்குவார்கள். போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது' என்றார்.

    சுற்றுலா பயணிகள் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா பயணிகளை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் காஞ்சிபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும், வியாபாரமும் பாதிக்காது' என்றார்.

    ×