search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை"

    • புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
    • தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு கடற்கரையையொட்டி கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

    ஒயிட்டவுண் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு காலனி பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை நடந்தது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் புதுச்சேரியில் போலீசார் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    இதற்காக புதுச்சேரி ஒயிட் டவுண் பகுதி முழுவதும், கடற்கரை சாலை ஒரு பகுதியும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதேபோல் மின்சாரமும் தடை செய்யப்பட்டது.

    அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையின்போது துப்பாக்கி சுடும் சத்தமும், வெடிகுண்டு சத்தமும் அவ்வப்போது கேட்டது. விடிய விடிய இந்த சத்தம் ஒலித்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

    இந்த தடுப்பு ஒத்திகையின்போது தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸ், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படிருந்தன. அதேபோல் அப்பகுதியில் டிரோன்கள் மூலமாக பயங்கரவாத கண்காணிப்பு பணி நடந்தது.

    பின்னர் பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகை என்று தெரிந்த பின்னரே அப்பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்தனர்.

    இதேபோல் கடற்கரைக்கு ஒயிட் டவுண் வழியாக சென்ற சுற்றுலா பயணிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.

    இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை அதிகாலை வரை நீடித்தது. விடிய விடிய நடந்த இந்த ஒத்திகையால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×