search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைவிதைகள்"

    • குமரி கடற்கரை பகுதியில் 1 லட்சம் பனைவிதைகள் நடவு பணி தொடக்க விழா
    • பனை வளர்ப்பை மேம்படுத்த தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு

    குளச்சல், ஜூன்.28-

    2023 - 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கும் ரூ.17 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும் பாராட்டு விழா மற்றும் குமரி கடற்கரை பகுதியில் 1 லட்சம் பனைவிதைகள் நடவு பணி தொடக்க விழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் ஜாண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் எட்வின் ஞானதாஸ் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் பாபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், கல்லூரி நிறுவனர் அருட்தந்தை ஜான் போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பனை வெறும் மரம் மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுச் சின்னம். தமிழகத்தின் மாநில மரம். நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், புயல், சூறாவளிகளில் இருந்து மக்களை பாதுகாக்க பனை பெரிதும் உதவுகிறது. பனையிலிருந்து அபூர்வமான மருத்துவ குணமிக்க பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பாகு போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனையிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மனித குலத்திற்கு பயன் படக்கூடியவை. அதனால்தான் பனையை கற்பக விருட்சம் என்று அழைக்கிறோம். பனை வளர்ப்பை மேம்படுத்த தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வெட்டுமடை கடற்கரையில் குமரி மாவட்டத்தில் 1 லட்சம் பனைவிதைகள் நடவுப்பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பீபீஜான், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் முனைவர் ஜெய் அருள் ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தனலட்சுமி, டினோ, இராஜேஸ்வரி, சமூக சேவகி குமாரி கலா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ×