search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணக்கார அருவி"

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது.
    • நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது. இங்கு செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள்.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி மற்றும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சொந்த வாகனத்தில் செல்பவர்களோ, வாடகை வாகனத்தில் அதிகப்படியான பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே செல்லும் நிலை மட்டுமே தற்போது நிலவி வருவதாக நடுத்தர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செல்ல ஒரு நபருக்கு ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இத்தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சவாலான தொகையாக இது இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    அருவிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல அனுமதி இல்லை. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அல்லது வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது. பணம் படைத்தோருக்கு மட்டுமே அருவிக்கு செல்ல முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் பணக்கார அருவியாக மணிமுத்தாறு அருவி மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×