search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் மாநிலம்"

    • பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்து சென்றும் பலனில்லை
    • அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது மோகா நகரம்.

    இங்கு வசிக்கும் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பல மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. அவரது உறவினர்கள் அவரை பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றும் பலன் கிடைக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன் அவருக்கு கடும் காய்ச்சலுடன் வயிற்று வலி அதிகரித்தது. அதனுடன் 2 நாட்களாக குமட்டல் வேறு இருந்து வந்தது. அவரால் சரியாக உறங்க முடியவில்லை.

    இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, மோகா நகரின் பர்னாலா அம்ரித்சர் பைபாஸ் சாலையிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அவரை கொண்டு சென்றனர். மருத்துவர்களின் முதல்நிலை சிகிச்சையில் பலன் இல்லாததால் அவரது வயிற்று பகுதியை எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்து அதனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

    ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் பல உலோக பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை நீக்க உடனடியாக ஒரு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

    3 மணி நேரம் நேற்று நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் ஒரு சிறு உலோக கிடங்கே இருந்தது.

    வெளியில் எடுக்கப்பட்ட உலோக பொருட்களில் சில, இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், சிறு உறை, தலைமுடிக்கான க்ளிப், ஜிப், கோளி குண்டு மற்றும் ஊக்கு ஆகியவை.

    இவ்வளவு பொருட்களும் அவர் வயிற்றில் இருந்தது மருத்துவர்களுக்கும், நோயாளியின் உறவினர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த நோயாளிக்கு ஓரளவு மனநோய் இருப்பதாக தெரிவித்த அவரது உறவினர்களுக்கு கூட எப்போது எவ்வாறு அந்த நோயாளி அவற்றை உட்கொண்டார் என்பது தெரியவில்லை.

    "இது போன்ற ஒரு வழக்கை இப்போதுதான் முதல்முறையாக நாங்கள் காண்கிறோம். சுமார் 2 வருடங்களாக வயிற்று வலியால் அந்த நோயாளி அவதிப்பட்டுள்ளார். அனைத்து பொருட்களையும் நாங்கள் வெளியில் எடுத்து விட்டோம். நோயாளி இன்னமும் சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை இன்னமும் சீராகவில்லை. அத்தனை பொருட்களும் நீண்ட காலமாக அவர் வயிற்றிலேயே இருந்ததால், அவருக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில காலம் அவருக்கு சிகிச்சை தேவைப்படும்" என மெடிசிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர். அஜ்மெர் கால்ரா தெரிவித்தார்.

    ×