search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் எதிர்ப்பு மசோதா"

    • தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டபடி கவர்னர் வருகைக்கு முன்பாகவே லாலி ரோடு சந்திப்பில் குவிந்தனர்.
    • தொடர்ந்து கவர்னர் அந்த இடத்தை கடக்கும் முன்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    கோவை:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    முன்னதாக கோவை வரும் கவர்னருக்கு அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது. நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

    கோவை லாலி ரோடு சந்திப்பு வழியாக கவர்னர் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு செல்லும்போது கருப்புக் கொடி காட்ட அந்த அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். இதையொட்டி லாலி ரோடு சந்திப்பு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டபடி கவர்னர் வருகைக்கு முன்பாகவே லாலி ரோடு சந்திப்பில் குவிந்தனர். அவர்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து கவர்னர் அந்த இடத்தை கடக்கும் முன்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆதிதமிழர் பேரவை, திராவிடர் தமிழர் பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கவர்னர் வருகையின்போது நடந்த கருப்புக் கொடி போராட்டம் கோவையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ×