search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிழல் தரும் மரங்கள்"

    • நிழல் தரும் மரங்கள் இல்லாததால் மதுரை நகர சாலைகளில் வெயில் சுட்டெரிக்கிறது.
    • வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

    மதுரை

    'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்', மரங்களை வெட்டக்கூடாது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், மரத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறியவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை, ஆக்சிஜன், காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளுக்கு மரங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் உள்ள மரங்களை வெட்டக்கூடாது,  மரத்தை அப்புறப்படுத்தி னால் அதற்கு பதிலாக 5 மரங்களை நட வேண்டும் என நீதிமன்றமும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் நடப்பது அதற்கு மாறாக உள்ளது.

    ஒரு காலத்தில் கடம்பவனம் என்றழைக்கப்பட்ட மதுரை நகரை சுற்றி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. சாலையின் இருபுறமும் பசுமை போர்வை போல் மரங்கள் வளர்ந்து காணப்படும். காலப்போக்கில் வளர்ச்சி திட்டங்கள், நகர மயமாக்குதல் என்ற பெயரில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன.

    மதுரை நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் இருந்த ஆல, அரச மரம் என ஆயிரக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கம் காரணமாக வெட்டப்பட்டது.மதுரை- திருப்பரங்குன்றம் ரோடு, கே.கே. நகர் - ஒத்தக்கடை வேளாண் கல்லூரி சாலை, அழகர் கோவில் ரோடு, மாவட்ட நீதிமன்ற சாலை, நத்தம் ரோடு, வைகை கரை சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வில்லாபுரம், அவனியாபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை மற்றும் சிறிய தெருக்கள் முதல் பெரிய தெருக்களில் இருந்த மரங்கள் சாலை விரிவாக்கம் செய்ய வெட்டப்பட்டது. சில இடங்களில் மின் கம்பங்கள் நடுவதற்கும் மரங்கள் அகற்றப்பட்டன.

    சில மாதங்களுக்கு முன்பு மதுரை புதூர் பகுதியில் இருந்து அழகர் கோவிலுக்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக சாலையோரத்தில் பல ஆண்டுகள் வளர்ந்து இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் அகற்றப்ப ட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலை வசதி மேம்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் போது நிழலுக்கு ஒதுங்க கூட மரங்கள் இல்லாதது வருத்தத்துக்குரிய விஷயம். இதுபோன்று நகரின் பல்வேறு சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.

    தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் அவதி அடைகின்றனர். மதுரையில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் சராசரி அளவு குறைந்து கொண்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வெப்பநிலையும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு இடத்தில் தட்பவெப்பநிலையை அங்குள்ள மரங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் நகரில் இருந்த மரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டதால் வருங்காலங்களில் மதுரையில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

    ×