search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவிலில்"

    • அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி
    • இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் : அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி நாகர்கோவிலில் இன்று மாரத்தான் போட்டி நடந்தது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 4 பிரிவுகளாக போட்டி நடந்தது.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டியானது மணிமேடை வேப்பமூடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம், செட்டிகுளம், இந்து கல்லூரி கோட்டார், ஒழுகினசேரி வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. இதேபோல் 8 கிலோ மீட்டர் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தொடங்கி மணிமேடை வேப்பமூடு வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

    பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கோட்டார், மீனாட்சிபுரம் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை மாரத்தான் வந்தடைந்தது.

    மினி மாரத்தான் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரமும் வழங்கப்பட்டது.

    10 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டியில் முதல் பரிசை ஜோஸ் தட்டி சென்றார். 2-வது பரிசை அனீஸ் லியோன் என்பவரும், 3-ம் பரிசை மணிகண்டன் என்பவரும் பெற்றனர். 8 கிலோ மீட்டர் தூரம் ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை அகில்ராம், 2-வது பரிசை ஜெயராஜ், 3-வது பரிசை அஜய்குமார் ஆகியோர் பெற்றனர்.

    5 கிலோ மீட்டர் தூரம் ஓடிய 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை கோலி கிராஸ் கல்லூரி மாணவி ரம்யா தட்டி சென்றார். 2-வது பரிசை அதே கல்லூரி மாணவி ஹரிஷ்மாவும், 3-வது பரிசை அனிஷாவும் பெற்றனர்.

    25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை போலீஸ் துறையை சேர்ந்த ரஜிதாவும், 2-வது பரிசை கிருஷ்ண ரேகாவும், 3-வது பரிசை சலினாவும் பெற்றனர்

    ×