search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுரோட்டில் குளித்த வாலிபர்"

    • உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாக குளித்து கொண்டிருந்தார்.
    • ஈரோடு போக்குவரத்து போலீசார் வாலிபர் பார்த்திபன் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் ஒன்றாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளது. இங்கு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, திருவேங்கட வீதி சாலை ஆகிய 5 சாலைகள் இணைகிறது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் ஜவுளிச்சந்தை, வணிக வளாகங்கள் இயங்கி வருவதால் எப்போதும் இங்கு மக்கள் நடமாட்டமும், வாகன போக்கு வரத்தும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்நிலையில் நேற்று மதியம் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் சிக்னலில் வந்து நின்றார். பின்னர் மொபட்டில் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில் இருந்து மக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளிக்க தொடங்கினார். இதனை அவரை பின்தொடர்ந்து வந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிக்னல் விழுந்தும் செல்லாமல் தொடர்ந்து குளித்து கொண்டிருந்தார்.

    அவர் உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாக குளித்து கொண்டிருந்தார். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் எச்சரிக்க அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

    இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, நடுரோட்டில் குளித்த வாலிபர் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டைச் சேர்ந்த பார்த்திபன் (26) என்று தெரிய வந்தது. மேலும் இவர் இன்ஸ்டாகிரம் மூலம் அவரை பின்தொடர்பவர்கள் அளிக்கும் சவால்களை ஏற்று அதை நிறைவேற்றி வந்து உள்ளார். அதன்படி ஒருவர் 10 ரூபாய் தருகிறேன். நடுரோட்டில் குளிக்கும் படி சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்று பார்த்திபன் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடுரோட்டில் குளித்து, சவாலுக்கான ரூ.10-ஐயும் பெற்றார். பார்த்திபன் ஏற்கனவே இரவு நேரத்தில் நடுரோட்டில் தூங்குவது, பச்சை மீன்களை சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை செய்துள்ளார் என்று தெரிய வந்தது. நடுரோட்டில் வாலிபர் குளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.

    இது குறித்து ஈரோடு போலீசாரும் விசாரணை நடத்தினர். இதையடுத்து நடுரோட்டில் குளித்த வாலிபர் பார்த்திபனை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

    ஈரோடு போக்குவரத்து போலீசார் வாலிபர் பார்த்திபன் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×