search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நச்சிகேட்டா"

    1999-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது இந்திய விமானப்படை விமானி நச்சி கேட்டா விடுதலையாது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #Kargilwar #Nachiketa
    சென்னை:

    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அபிநந்தன் நேற்று பிடிபட்டதும் கார்கில் போரின் போது பாகிஸ்தானால் பிடிபட்ட நச்சிகேட்டா தான் நினைவுக்கு வருவார்.

    1999-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரின் போது இந்திய விமானப்படை விமானி நச்சிகேட்டா பாகிஸ்தான் வீரர்களால் பிடித்து செல்லப்பட்டார். சிறிது காலம் சிறை வாசம் அனுபவித்தவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். கார்கில் போரின்போது அவரது விமானத்தில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, விமானத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது.

    இதன் காரணமாகவே அவர் பிடிபட்டார். அப்போது நச்சி கேட்டாவுக்கு 25 வயது. மிக் ரக விமானத்தில் பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தார். அவரது விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் அதில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    சூழ்நிலையை அறிந்து கொண்ட நச்சிகேட்டா தன்னிடம் இருந்த கைத்துப் பாக்கியைக் கொண்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதில் இருந்த குண்டுகள் தீர்ந்துவிடவே பாகிஸ்தானிடம் பிடிபட்டார்.

    பாகிஸ்தானில் இருந்த நாட்களை பற்றி நச்சிகேட்டா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-



    “பாகிஸ்தான் வீரர்களிடம் நான் சிக்கியது மோசமான தருணம். அவர்கள் என்னை கொலைகூட செய்து இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை நான் அவர்கள் பகுதியில் தாக்குதல் நடத்திய எதிரி நாட்டு வீரன். ஆனால் என் நல்ல நேரம் அங்கு இருந்த உயர் அதிகாரி மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டார். அந்த சூழலை புரிந்துகொண்டார்.

    வீரர்களை அவர் சமாதானப்படுத்தினார். அங்கிருந்த சூழலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த நேரத்தில் மரணம்தான் எனக்கு முன்பு இருந்த எளிமையான வழியாகத் தெரிந்தது. 3, 4 நாள்கள் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளானேன்’

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இந்தியா தரப்பில் இருந்து சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே பாகிஸ்தான் அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டது. 8 நாட்களுக்கு பின்னர் அவர் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார்.

    தற்போது இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாக பணிபுரிந்துவருகிறார். நச்சிகேட்டவை மீட்டது போன்று, உலக நாடுகளின் உதவியோடு அபிநந்தனையும் மீட்க முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, ‘சிறைபிடிக்கப்படும் வீரர்களையோ அல்லது சரணடையும் வீரர்களையோ காயப்படுத்தக் கூடாது. காயமடைந்த வீரர்களுக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை கொல்ல கூடாது.

    விசாரணையின்றி அவர்களுக்கு தண்டனையும் வழங்கக்கூடாது. அதே போல் 7 நாள்களுக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்‘ என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 196 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. #Kargilwar #Nachiketa #IndiaPakistanWar
    ×