search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஏற்பாடு"

    • பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பதற்றமான வாக்குச்சாவடிகள் எவ்வளவு உள்ளன? என்பது பற்றி 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் மொத்தம் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது.

    சென்னையிலும் 3 பாராளுமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தென்சென்னையில் 456 சாவடிகளும், வடசென்னையில் 254 சாவடிகளும், மத்திய சென்னையில் 192 சாவடிகளும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டும் 982 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளிலும் தேர்தலின் போது துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முந்தைய நாளான 18-ந்தேதி அன்றே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த பணிகள் அடுத்த வார இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குச்சாவடி மையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் ஓட்டு போட வரும் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. துணை ராணுவ படையினருடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இப்படி பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படை சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ×