search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்ப திருவிழாnellaiappar temple"

    நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முன்பொரு காலத்தில் சைவ மதத்துக்கும், சமண மதத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி சமண மதத்தினர், சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை சோதித்தனர். அதாவது அப்பர் பெருமானை கல்லில் கட்டி கடலில் தூக்கிப்போட்டனர். அப்போது அப்பர் பெருமான், “கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

    அப்போது சிவனின் அருளால் அப்பர் பெருமான் கட்டப்பட்டிருந்த கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இதன்மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளை உலகுக்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சியை பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது.

    அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாற்றுக்கு ஏற்ப, பாடல் பெற்ற சைவ திருத்தலமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் ஆண்டுதோறும் அப்பர் பெருமான் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    மாசி மகத்தையொட்டி நேற்று பொற்றாமரை குளக்கரையில் அப்பர் பெருமானை யானை காலால் தள்ளுவது போலவும், தண்ணீரில் தூக்கிப்போடுவது போல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அப்பர் பெருமான் ஏறி சுற்றி வந்தார். அப்போது தெப்ப மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் அப்பர் பெருமானை வழிபட்டனர்.
    ×