search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் சிலை"

    • திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படும்.
    • பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் அம்சங்கள் ஆகும்.

    திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படும். எனவே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அதன் மேல் ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் ஆரம்பமானது.

    முதல்கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 80 டன் இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. சிலையை சுற்றிலும் காகித கூழ் ஒட்டும் பணி நடைபெற்றது. இவ்வாறு ஒட்டப்படும் காகித கூழ் மூலம் சிலையில் படிந்திருக்கும் உப்புத்தன்மை முழுவதுமாக நீக்கப்படும். பின்னர் காகித கூழ் அகற்றப்பட்டு சிலை சுத்தம் செய்யப்படும். தற்போது காகித கூழ் ஒட்டும் பணி 80 சதவீத அளவு நிறைவடைந்து உள்ளது. அடுத்த கட்டமாக காகிதகூழ் அகற்றப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை மூலம் சிலை முழுவதுமாக பூசப்படும்.

    இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 5-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இடையிடையே பெய்த மழை காரணமாகவும் காற்றின் வேகம் காரணமாகவும் பணிகள் தடைபட்டன.

    தற்போது 65 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×