search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திநகர் சத்யா"

    • தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை
    • தண்டையார்பேட்டையில் உள்ள ராஜேஷ் வீட்டில் சோதனை

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன் அதிமுக-வினர் குவிந்துள்ளனர். இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னையில் 16 இடங்களில் அதிகாரிகள் சோதனை
    • திருவள்ளூர் மற்றும் கோவையில் தலா ஒரு இடங்களில் சோதனை

    அ.தி.மு.க. ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனையும் நடத்தினார்கள். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தி.நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான சத்யா என்கிற சத்ய நாராயணன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் எம்.எல்.ஏ.வாக இருந்த கால கட்டத்தில் தி.நகர் சத்யா ரூ.2.64 கோடி அளவு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வடசென்னை பகுதியை சேர்ந்த அரவிந்தக்சன் என்பவர் கடந்த ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டில் தி.நகர் சத்யா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சத்யா 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 78 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது சத்யாவின் சொத்து மதிப்பு ரூ.13 கோடியே 2 லட்சம் என்பது தெரிய வந்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்து கணக்கை மறைத்துள்ளார்.

    இப்படி சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆரம்ப கட்ட விசாரணையை முடித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதன் பேரிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தி.நகர் சத்யா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி அளவுக்கு சொத்து குவித்திருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் தி.நகர் சத்யாவின் வீடு உள்பட 16 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், கோவை ஆகிய இடங்களில் என மொத்தம் 18 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    வடபழனி நெற்குன்றம் காலனியில் உள்ள சத்யாவின் வீட்டுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் திலீப்குமார் என்ற தொழில் அதிபரின் அலுவலகத்தில் இன்று காலை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இவர் முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவின் நெருங்கிய நண்பர் ஆவார். யாமினி லேண்ட் புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் நிலம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரது அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கோவை அருகே உள்ள பொன்னேகவுண்டன் புதூரில் தி.நகர் சத்யாவின் மகளான கவிதா வசித்து வந்துள்ளார். அங்கு போலீசார் சென்றபோது அவர் வசித்து வந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விசாரணை நடத்தி கவிதா தற்போது எங்கிருக்கிறார் என்கிற தகவல்களை திரட்டிக் கொண்டு சென்றனர்.

    தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 பக்கங்களை கொண்ட முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

    தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான சத்திய நாராயணன் 2016-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதியில் இருந்து 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி வரை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த கால கட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி அளவுக்கு சொத்து குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    பி.காம் முடித்துள்ள சத்யாவுக்கு ஜெயசித்ரா என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் வடபழனி பகுதியில் சைக்கிள் கடை, பால் விற்பனை நிலையம், டி.வி., சி.டி.க்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பொது பணித்துறை காண்ட்ராக்ட் தொழில், டாஸ்மாக் மதுக்கடை ஆகியவற்றையும் நடத்தி வந்துள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆகும் முன்னர் தி.நகர் சத்யாவின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 36 ஆக இருந்துள்ளது.

    2016-ம் ஆண்டு முதல், 2021-ம் ஆண்டு வரை தி.நகர் சத்யா எம்.எல்.ஏ.வாக இருந்த கால கட்டத்தில் தனது பெயரிலும், மனைவி மற்றும் மகள்கள் பெயரிலும் விவசாய நிலங்கள், மற்றும் காலி மனைகளை வாங்கி குவித்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மும்முடிப்பாக்கம் கிராமத்தில் 24.79 சென்ட் நிலத்தை தனது மனைவி ஜெயசித்ரா பெயரில் தி.நகர் சத்யா வாங்கியுள்ளார். ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் இந்த இடம் வாங்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி பத்திர பதிவு அலுவலகத்துக்குட்பட்ட சாந்தி நகரில் பத்மாவதி டவர்ஸ் என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் 1250 சதுர அடி கொண்ட வீட்டை 4-வது மாடியில் சத்யா வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.

    வடபழனி நெற்குன்றம் பாதையில் உள்ள வீட்டை தனது மகள் கவிதாவின் பெயரில் சத்யா செட்டில் மெண்டாக எழுதி கொடுத்து உள்ளார். கோடம்பாக்கம் பரமேஸ்வரி காலனியில் வேலை முடிவுறாத 1,190 சதுர அடி கொண்ட வீட்டை தனது மனைவி பெயரில் செட்டில் மெண்ட் செய்து கொடுத்து உள்ளார். வடபழனி அழகிரி நகர், திருநகர் முதல் தெரு ஆகிய இடங்களிலும் கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் அருகே மும்முடிப்பாக்கத்தில் 1.97 சென்டில் பண்ணை வீடு, சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 2,400 சதுர அடி நிலம் ஆகியவையும் வாங்கப்பட்டுள்ளன.

    கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் 0.98 சென்ட் விவசாய நிலத்துக்கான பவர் பத்திரமும் தி.நகர் சத்யாவால் வாங்கப்பட்டுள்ளன. தடா அருகில் உள்ள கருகு கிராமத்தில் ஒரு ஏக்கர் 8.5 சென்ட் அளவிலான காலி இடமும் வாங்கப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் பகுதியில் 2.12 ஏக்கர் விவசாய நிலத்துக்கான பொது பவர் பத்திரம் மற்றும் 0.99 சென்ட் விவசாய நிலத்துக்கான பவர் பத்திரம் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு மாருதி ஸ்விப்ட் காரை ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 445-க்கு வாங்கியுள்ள சத்யா, 2010-ம் ஆண்டு 21 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பார்ச்சுனர் காரையும் வாங்கி இருக்கிறார்.

    இதன் பின்னர் 2012-ம் ஆண்டு 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் ரெனால்ட் டஸ்டர் காரையும் சத்யா வாங்கி பயன்படுத்தி உள்ளார்.

    இதன் மூலம் முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதிகளில் அசையா சொத்துக்களை அதிக அளவில் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பு அவரது சொத்து மதிப்பு 2016-ம் ஆண்டு 3 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரமாக இருந்த நிலையில் எம்.எல்.ஏ. ஆன பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.16 கோடியே 44 லட்சத்து 74 ஆயிரம் என்கிற அளவுக்கு உயர்ந்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×