search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் சினிவாசன்"

    • தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி தென்மாவட்ட அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தங்க கவசத்தை யார் கையில் ஒப்படைப்பது? என்பது குறித்து மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பசும்பொன்னில் குவிந்து முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்துவார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, பசும்பொனில் உள்ள முத்துராமலிங்கதேவரின் சிலைக்கு அணிவிக்க ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார்.

    இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது நினைவிடத்தில் உள்ள தேவர் சிலையில் பொருத்தப்படும். விழா முடிந்ததும் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள லாக்கரில் கொண்டு வந்து தங்க கவசத்தை வைப்பது வழக்கம். இதற்காக அ.தி.மு.க. பொருளாளருக்கு இதற்குரிய முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அப்போது அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வங்கி லாக்கரில் வைத்து நிர்வகித்து வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி. தினகரன் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பினரும் வங்கிக்கு வந்து உரிமை கொண்டாடிய நிலையில் வங்கி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசத்தை ஒப்படைத்து விழா முடிந்ததும் திருப்பி லாக்கரில் வைக்க ஏற்பாடு செய்தனர்.

    பின்னர் அ.தி.மு.க.வில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் ஐக்கியமாகி துணை முதல்வரானார். அதன் பிறகு 2018, 19, 20, 21 ஆகிய ஆண்டுகளில் தேவர் ஜெயந்திக்காக ஓ.பன்னீர்செல்வமே நேரில் வந்து தங்க கவசத்தை பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வந்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களாக அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தலைமை யுத்தம் நீடித்து வரும் நிலையில் பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.ன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நீக்கி அதிரடி காட்டினார். இதனால் கட்சியில் முக்கிய பதவிகளில் யார் யார் உள்ளனர்? என்பதை இன்னும் உறுதி செய்ய முடியாத நிலை அ.தி.மு.க.வில் நிலவி வருகிறது.

    வருகிற 28-ந் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா தொடங்க உள்ளது. இதற்காக வருகிற 25-ந் தேதி வாக்கில் மதுரை வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

    ஆனால் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவருமே தங்கள் வசம் தங்க கவசத்தை ஒப்படைக்க மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் தங்க கவசத்தை யார் கையில் ஒப்படைப்பது? என்பது குறித்து மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கலாமா? அல்லது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வசமே ஒப்படைக்கலாமா? இதில் சட்ட சிக்கல் ஏற்பட்டால் 2017-ம் ஆண்டு செய்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்கலாமா? என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கி சார்பில் விளக்க நோட்டீசு தரப்படும் என்று தெரியவந்துள்ளது. தேவர் தங்க கவசத்தை பெறுவதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி தென்மாவட்ட அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×