search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. மன்னராட்சி"

    • திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
    • தி.மு.க. மன்னராட்சி போல அரசை நடத்துகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் முன்ளாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போது வந்தாலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள். குறிப்பாக இந்த 18 மாத ஆட்சியில் பொது நலன்கள், மக்கள் திட்டங்களை மறந்து விட்டது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றை மூடுவிழா கண்டுவிட்டது போல் அம்மா உணவகத்தையும் மூடு விழா செய்ய முயற்சிக்கிறது.

    குறிப்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியை புறக்கணித்து வருகின்றனர். ஏதாவது திட்டம் குறித்து கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். இந்த தி.மு.க. ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை, சத்தியம் இல்லை, நேர்மையும் இல்லை.

    கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக திட்டங்களை பாரபட்சம் இன்றி வழங்கினோம். இன்றைக்கு கல்லூரி, பள்ளிகளில் அருகே போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பது வேதனையான விஷயமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகரித்து உள்ளனர்.

    மக்கள் நலன் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த மேடை அமைத்தால், அதனை பிரிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. நீங்கள் இங்கு மேடையை பிரித்து விடலாம். ஆனால் எங்களையும் மக்களையும் பிரிக்க முடியாது.

    கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இப்படி மன்னராட்சி தமிழகத்தில் மலர செய்துள்ளார் ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டர் எடப்பாடிபழனிசாமி முதலமைச்சராக முடியும் என்ற வரலாற்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

    நாங்கள் ஜனநாயக ஆட்சி மலர பாடுபட்டு வருகிறோம். ஆனால் இன்றைக்கு மன்னராட்சியை ஒழித்தும் கூட புறவழியில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் தி.மு.க. நடத்தி வருகிறது. இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்?

    மீண்டும் ஜனநாயகத்தை நாங்கள் மலரச் செய்வோம் அ.தி.மு.க.வை தி.மு.க. சூழ்ச்சி செய்து, சிதைத்து, கலைக்க, உடைக்க நினைத்தாலும் முடியாது. இந்த இயக்கம் வீழ்வது போல் தெரியும் ஆனால் விஸ்வரூபம் எடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×