search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்"

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து வேறு மாநில ஐகோர்ட்டுக்கோ அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கோ மாற்றக்கோரி தினகரன் ஆதரவாளர்கள் 17 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.
    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

    இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த புகாரை தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

    இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

    இந்தநிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார். அதேசமயம், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதால், 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார்.

    இந்தநிலையில், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த மனுக்களில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் அல்லது சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களில் ஒருவர் உறுதி செய்தார்.

    இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கோடை விடு முறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் ஒய்.கிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மீது நம்பிக்கையில்லை என்றால் வேறொரு நீதிபதி மூலம் வழக்கை விசாரிக்க கோரலாம். அதேவேளையில் இதுபோன்ற ஒரு பிரச்சினை வரும்போது சம்பந்தப்பட்ட நீதிபதி தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்ளலாம். இதுபோன்று பல்வேறு வழக்குகள் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிபதியை மாற்றம் செய்வது சம்பந்தமாக அதே நீதிபதியிடமோ, தலைமை நீதிபதியிடமோ அல்லது சுப்ரீம் கோர்ட்டிலோ முறையிடலாம். வேறு மாநில ஐகோர்ட்டு நீதிபதி மூலம் விசாரிக்கவும் கோரலாம். முழுமையான ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டையும் விசாரிக்க கோரலாம்’ என்றார்.
    ×