search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலை மரக்கன்றுகள்"

    • அன்னிய தாவரங்களை முழுமையாக அகற்ற உதவ முன்வர வேண்டும்.
    • சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திலும் மாவட்ட பசுமைக்குழு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் அந்த குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த மாதத்திற்கான கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் அன்னிய தாவரங்கள் குறித்து, வனத்துறையால் அன்னிய தாவரங்களின் படங்களுடன் விரிவான முறையில் குழு உறுப்பி னர்களுக்கு விளக்கப்பட்டது.

    மேலும் அந்நிய தாவரங்களுக்கு மாற்றாக, நீலகிரி மாவட்ட சீதோஷ்ண நிலையில் நன்கு வளரக்கூடிய சோலை நாற்றுகளின் விவரங்களும் படங்களுடன் எடுத்து கூறப்பட்டன. ஒவ்வொரு அரசு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர்களால் விளக்கப்பட்டது. பின்னர் இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வளர்ந்துள்ள அன்னிய தாவரங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றை படிப்படியாக அகற்ற அனைத்து துறைகளும் கூட்டாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அவ்வாறு அன்னிய தாவரங்கள் அகற்றப்பட்ட இடங்களில், சோலை மரக்கன்று மட்டுமே நடப்பட வேண்டும். நடப்பட்ட மரங்கன்றுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் மூலம் பராமரிக்கப்படும் நர்சரிகளில், தேவைக்கேற்ப சோலை நாற்றுகள் அதிகம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

    அன்னிய தாவரங்கள் அரசு நிலங்களில் மட்டும் அல்லாமல், தனியார் பட்டா நிலங்களிலும் காணப்படுவதால், பொதுமக்களும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி, அன்னிய தாவரங்களை இந்த மாவட்டத்தில் இருந்து முழுமையாக அகற்ற உதவ முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர்கள் சச்சின் போஸ்லே தூக்காராம், கொம்மு ஓம்காரம், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக்கண்ணன் (கூடலூ ர்), நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×