search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையில் கனமழை"

    • மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கமிஷனர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • புதிதாக போடப்பட்ட சாலைகளும் கேபிள் மற்றும் குழாய் பதிப்பிற்காக உடைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. சிறு சிறு தூறலாக ஆரம்பித்த மழை பின்னர் கன மழையாக அதிகரித்தது. நகரின் ஒரு சில பகுதிகளில் மழை லேசாகவும், ஓரிரு இடங்களில் கன மழையாகவும் பெய்தது.

    விட்டு விட்டு பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கின. நள்ளிரவு முதல் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் அதிகாலையில் மழை நின்றதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் இரவு வீடுகளில் ஏ.சி. பயன்பாடு குறைந்தது. மின் விசிறியை மட்டும் பயன்படுத்தினார்கள். இரவில் பெய்த மழையால் சென்னையில் குளிர்ச்சி நிலவியது.

    அதே நேரத்தில் ஒருசில சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. நகரில் ஒரு சில சாலைகள் போடப்படாமல் இருந்ததால் இந்த மழையில் குண்டும் குழியுமாக மாறி காட்சியளித்தன. மெட்ரோ ரெயில் பணி, மழை நீர் கால்வாய் பணி போன்றவற்றிற்காக சில இடங்களில் சாலைகள் சரி செய்யப்படவில்லை.

    சில இடங்களில் போடப்பட்ட சாலையும் மீண்டும் உடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. புதிதாக போடப்பட்ட சாலைகளும் கேபிள் மற்றும் குழாய் பதிப்பிற்காக உடைக்கப்பட்டுள்ளன. இது போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் பகுதியில் கன மழையால் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நின்றன. மழையால் மேலும் பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர்.

    தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் ரெயில் நிலையம் சந்திக்கும் சாலையில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது. மழை நீர் வெளியேற வழியில்லாததால் இன்று காலையில் வரை அப்பகுதியில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். ஒரு சிலரின் வாகனங்கள் மட்டுமே அந்த பகுதியில் தப்பி சென்றது. சிலரின் வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி நின்றன. அவர்கள் தங்கள் வாகனத்தை மழை நீரில் தள்ளிச் சென்றனர்.

    இதே போல ரோஸ் கோர்ஸ் உட்புற சாலையிலும் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் வாகனத்தில் வெளியே வர முடியில்லை. வேலைக்கு செல்லக் கூடியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    கிண்டி சுரங்கப் பாதையில் தேங்கி நின்ற மழை நீரால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. மின் மோட்டார் மூலம் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர்.

    கிளாம்பாக்கத்திலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் காலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யானைக் கவுனி பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதனால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, கமிஷனர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பெரம்பூர் சுரங்கப் பாதை மற்றும் அயனாவரம் மெயின் ரோடு, மாதவரம் டேங்க் ரோடு பகுதியிலும் தேங்கி நின்ற நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. 103 மில்லி மீட்டர் மழை பதிவானது. பூந்தமல்லியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் அதிக அளவில் சூழ்ந்து நிற்பதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட முல்லா தோட்டம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை நீரோடு அதிக அளவு கழிவுநீர் கலந்து இருப்பதால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    கழிவுநீர் அனைத்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறு வீடுகளுக்குள் புகுந்து கழிவுநீரை அள்ளி வெளியே ஊற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதே போல குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு கலைக்கல்லூரி வளாகம் முழுவதும் மழை நீர் அதிக அளவு சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூரில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஏ.சி.எஸ். கல்லூரி பகுதியில் 11 செ.மீ., மீனம்பாக்கம் 9 செ.மீ., நுங்கம்பாக்கம் 7 செ.மீ. பெய்துள்ளது.

    ×