search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கோயம்பேடு"

    சென்னை கோயம்பேட்டில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் புகை வெளியேறியதில் மூச்சு திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #AC
    போரூர்:

    கோயம்பேடு மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது38). பூந்தமல்லியில் உள்ள தனியார் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர் வைசராக இருந்தார்.

    இவரது மனைவி கலையரசி (30). இவர்களது மகன் கார்த்திக் (8). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று இரவு அனைவரும் வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஏ.சி.யை இயக்கி விட்டு தூங்கினர். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் வரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள முன்பக்க அறையின் தரையில் சரவணன் இறந்து கிடந்தார். மேலும் படுக்கை அறையில் கலையரசியும், அவரது மகன் கார்த்திக்கும் இறந்து கிடந்தனர்.

    அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் இருந்து கியாஸ் கசிந்து கொண்டிருந்தது. இதனால் மூச்சி திணறிய கலையரசியும், மகன் கார்த்திக்கும் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளனர். உயிருக்கு போராடிய சரவணன் வீட்டிலிருந்து வெளியே வர முயன்று முன்பக்க அறையில் விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது.

    பலியான தம்பதி

    இது குறித்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் கோயம்பேடு, மதுரவாயல்- பூந்தமல்லி சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது வாகனம் ஒன்று மோதி இருக்கிறது. இதனால் மெட்டுக்குளம் பகுதியில் நள்ளிரவில் மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து சரவணன் வீட்டில் வாங்கி வைத்திருந்த சிறிய ஜெனரேட்டர் வைத்து ஏ.சி.யை இயக்கி இருக்கிறார். இதன் பின்னர் மின்சாரம் வந்ததும் தொடர்ந்து ஏ.சி.யை இயக்கி உள்ளார். அப்போது ஏ.சி.யில் இருந்து கசிந்த கியாஸ் அவர்கள் 3 பேருக்கும் எமனாக மாறி விட்டது.

    தூக்கத்தில் இருந்ததால் கியாஸ் கசிந்து இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. மயக்க நிலையிலேயே 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

    மெக்கானிக் ஒருவர் இன்று காலை அந்த ஏ.சி. எந்திரத்தை சோதனை செய்தார். அதில் கியாஸ் கசிந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஏ.சி. எந்திர கியாசால் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #AC
    ×