search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனமர"

    • ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர்கள் சக்திவேல், ஷஷாங் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    12 கிலோ சந்தன கட்டை

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரை ஏற்காடு வனச்சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்தனர்.

    அப்போது அவர் ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (59) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை விசாரித்ததில் ஏற்காடு குண்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் (42), மாரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி சிராய்புகளாய் தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் வெள்ளையன், வெங்கடேசன் ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இதில் கடந்த 16-ந் தேதி வெள்ளையனை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வெங்கடேசனுடன் சேர்ந்து சந்தனமரங்களை வெட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரங்கராஜ், வெள்ளையன் ஆகியோருக்கு சந்தன மரம் வெட்டி கடத்தியதற்காக மாவட்ட வன அலுவலர் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை வாழவந்தி பிரிவு வனவர் சஞ்சய் தலைமையிலான குழுவினர் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரும் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் வெங்கடேசன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டிற்கு சென்று ஒரு சந்தன மரத்தை 15 துண்டுகளாக வெட்டி சுமார் 7 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளாக்கி அதை ரங்கராஜூக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேசனுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தார். இதுகுறித்து வனச்சரகர் முருகன் கூறுகையில் வனகுற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×