search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கார் வெடிப்பு வழக்கு"

    • நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • கோவையில் உக்கடம் உள்பட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    சென்னை:

    கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார்.

    தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரே அந்த சதித்திட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    கார் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முபினுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவருடன் படித்தவர்கள் வீடுகளில் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி தடயங்களைக் கைப்பற்றி வருகிறார்கள்.

    குண்டு வெடிப்பை நிகழ்த்த முபினும், அவரது கூட்டாளிகளும் பல இடங்களில் ரகசிய கூட்டங்களை நடத்தி உள்ளனர். மேலும் தாக்குதல் நடத்துவதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக பலர் அவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளதும், பலர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என கண்ட றிந்து அவர்களை கைது செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்ட னர்.

    இந்நிலையில், முபினின் நண்பர்கள், அவருடன் அரபிக்கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர் என 8 மாவட்டங்களில் இன்று ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உக்கடம் அல்-அமீன் காலனியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஹபீப் ரகுமான் என்பவர் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் அவர்கள் வெளியே அனுமதிக்கவில்லை. புதிய நபர்களையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போனையும் அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். சோதனையின்போது சில ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

    உக்கடம் என்.எஸ்.கார்டனில் உள்ள பைசல்ரகுமான் என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். போத்தனூரில் நாசர் என்ற மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இதேபோல மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் இந்த சோதனையானது நடந்தது. சோதனை நடந்த இடங்களில் பிரச்சனைகள் எதுவும் நிகழாமல் இருக்க உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது. திரு.வி.க. நகரில் வசிக்கும் முகம்மது அப்துல்லா பாஷா என்பவர் வீட்டுக்கு அதிகாலையில் அதிகாரிகள் அதிரடியாகச் சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர், வில்லிவாக்கம், பல்லாவரம் உள்ளிட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கடலூர் மங்கலம்பேட்டையில் முகமது சுலைமான் வீட்டிலும், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பக்ரூதின் அலி அகமது வீட்டிலும் சோதனை நடந்தது.

    இன்றைய சோதனையின் போது பல இடங்களில் இருந்து லேப்-டாப், செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த ஆவணங்களை கொண்டு தொடர் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

    கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 3 முறை சோதனை நடத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று 4-வது முறையாக இந்த சோதனை நடந்தது. ஒரே நாளில் 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×