search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள கனமழை"

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்களின் தன்னலமற்ற சேவைக்காக மசூதிக்கு சென்று நன்றி தெரிவித்த பாதிரியார்.
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடரில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிறிஸ்துவ தேவாலயயம் ஒன்றில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு  தக்க நேரத்தில் உணவு வழங்கி உதவிய  இஸ்லாமியர்களின் சேவையை பாராட்டும் விதமாக பாதிரியார் ஒருவர் மசூதிக்கே சென்று நன்றி உரையாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் 580 பேர் தஞ்சம்  அடைந்திருந்தனர். பெரு வெள்ளம் காரணமாக அவர்கள் உண்ண உணவின்றி தவித்துள்ளனர். அச்சமயம் சனு புதுசேரி எனும் பாதிரியார் மத வேறுபாடுகளை கடந்து அருகில் இருந்த மசூதி ஒன்றின் மௌலவியிடம் உதவி கோரினார்.

    பாதிரியாரின் கோரிக்கையை ஏற்ற மௌலவி தேவாலயத்தில் இருந்த அனைவருக்கும் உடனடியாக உணவு ஏற்பாடு செய்து உதவினார். மேலும், உணவு மட்டுமின்றி மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருடகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்து உதவினர்.

    இந்நிலையில், அவசரகாலத்தில் வேறுபாடுகளை மறந்து உதவிய இஸ்லாமிய சகோதர்களுக்கும் மசூதியின் மௌலவிக்கும் நன்றி செலுத்தும் விதமாக பாதிரியார் சனு புதுசேரி, வேச்சூரில் உள்ள மசூதிக்கு சென்றார். அங்கு தொழுகைக்காக கூடியிருந்த 250-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மத்தியில் நன்றி உரையாற்றினார்.

    மதவேறுபாடுகளை கடந்து கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மசூதிக்கு சென்று நன்றி தெரிவித்த சம்பவம் மனிதநேயத்திற்கான உதாரனமாக அப்பகுதி மக்களால்  பார்க்கப்படுகிறது.
    கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaReliefFund
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் 28-ந் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஆண்டு திட்ட மதிப்பீடான ரூ.37,247.99 கோடியைவிட இழப்பு மிக அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், அவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

    மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநிலத்தில் உள்ள 10 முதல் 15 மாவட்டங்களில் செப்டம்பர் 3-ம் தேதி நிவாரண நிதி திரட்டும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யும் இந்த கூட்டங்களில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாநில மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர்.

    இதைப்போன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நிவாரண நிதி திரட்டும் கூட்டங்கள் செப்டம்பட் 11-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளன.

    வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த சிறு குறு தொழிலாளர்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ.10 லட்சம் வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் முறையில் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    சபரிமலை யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக பம்பை மற்றும் சபரிமலையில் சேதமடைந்துள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் பாதைகள் சீரமைக்கப்பட்டும், இதற்காக உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.1027 கோடி கிடைத்துள்ளது. இதில், ஆன்லைன் மூலமாக 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaReliefFund
    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் பார்வையிட உள்ளார். #KeralaFloods #RahulGandhi
    புதுடெல்லி :

    கேரள மாநிலத்தில் கொட்டி தீர்த்த தென்மேற்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இதற்கிடையே, கனமழை, வெள்ளம் மற்றும்  நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு  திரும்பி வருகிறது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்றும், நாளையும் பார்வையிட உள்ளார்.

    இந்த 2 நாட்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் ராகுல் காந்தி, மீனவர்கள், தன்னலம் கருதாமல் தொடர்ந்து சேவை செய்து வரும் தன்னார்வலர்கள், நிவாரணம் வேண்டுவோருக்கு உதவி வருகிறவர்கள் ஆகியோரை சந்தித்தும் பேசுகிறார். மேலும் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். #KeralaFloods #RahulGandhi
    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது. #KeralaFloodRelief #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இதற்கிடையே, கன மழை, வெள்ளம் மற்றும்  நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு  திரும்பி வருகிறது. கேரளாவை  சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலத்துக்கு இந்தியன் வங்கி சார்பாக ரூ. 4 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனை, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.ராஜீவ் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இந்த நிதியை அவரிடம் வழங்கினார். #KeralaFloodRelief #KeralaFloods
    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #KeralaReliefFund #PinarayiVijayan
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. அத்துடன் மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

    அங்கு தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் வெள்ளம், சேறு, சகதியால் மாசுபடிந்த வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் இந்த பணிகளையும், மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் முகாம்களையும் முதல்–மந்திரி பினராயி விஜயன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

    மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு மற்றும் துப்புரவு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்மூலம் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகள் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 துணைமின் நிலையங்களில் 41 நிலையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

    வியாழக்கிழமை நிலவரப்படி 2,774 முகாம்களில் 10,40,688 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாம்கள் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. எனவே ஓணம் விடுமுறையை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வேறு அரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.

    இந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கிடைப்பதாக அவர்கள் திருப்தி வெளியிட்டு உள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை குறித்தே அவர்கள் கவலைப்படுகின்றனர். அவை அனைத்தும் சரி செய்யப்படும்.

    மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்கான வட்டியை அரசே செலுத்தும். மேலும் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கியை பை வழங்கப்படும்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார். #KeralaReliefFund #PinarayiVijayan
    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் ரூ.4.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #BillGates
    வாஷிங்டன் :

    கன மழை,  வெள்ளம் மற்றும்  நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு  திரும்பி வருகிறது. கேரளாவை  சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

    கேரளாவில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண மற்றும் சுகாதார பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ஐ.நா.வின் ‘யுனிசெப்‘ அமைப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘மைக்ரோசாப்ட்‘ நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தனது, ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்‘ மூலம் கேரளாவின் மறுசீரமைப்புக்காக 6 லட்சம் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.4.25 கோடி) நிதியாக வழங்கினார். இந்த தொகையை யுனிசெப் அமைப்பிற்கு அவர் அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து பில்கேட்சின் அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், ‘கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    யுனிசெப்பும், இதர தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து வெள்ளம் காரணமாக நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு நாங்கள் வழங்கியுள்ள நிதி, மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்‘ என்று கூறப்பட்டு உள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief  #BillGates
    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி, ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.3 கோடி, சாம்சங் இந்தியா ரூ 1.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளன. #KeralaFlood
    புதுடெல்லி :

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு அதானி அறக்கட்டளை சார்பாக ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதி கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதானி அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சாம்சங் இந்தியா நிறுவனத்தின் சார்பாக ரூ.1.5 கோடிக்கான காசோலையை அந்நிறுவனத்தின் பிரதிநிதி கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும், முகாம்களில் உள்ளவர்களுக்காக ஆயிரம் படுக்கைகள் மற்றும் போர்வைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவிற்கு நிதியுதவியாக ரூ.3 கோடிக்கான காசோலையை பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. #KeralaFlood
    தற்போது நடைமுறையில் உள்ள வெளிநாட்டு கொள்கையின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய நிதியை பெற இயலாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #KeralaFloods
    புதுடெல்லி :

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை மாநிலத்தை நிர்மூலமாக்கியது.

    மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 370 பேர் மழைக்கு பலியானார்கள். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 3 லட்சம் விவசாயிகள், 45 ஆயிரத்து 988 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மண் மூடி சேதமானது.

    இப்படி மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று மாநில அரசின் முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

    இதற்கிடையே கேரள வெள்ளப்பாதிப்பை மத்திய அரசு தீவிர இயற்கை பேரிடர் ஆக அறிவித்துள்ளதால் பல வெளிநாடுகளும் கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளன.

    வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவிகளை மத்திய அரசு வழியாகவே வாங்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரளா வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள வெளியுறவு கொள்கைகள் பிற நாடுகளின் அரசுகள் நேரடியாக அளிக்கும் நிவாரண நிதிகளை வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளார் ராவேஷ் குமார் கூறுகையில், ’பேரிடர் நிவாரண நிதியாக மற்ற நாட்டு அரசுகள் அளிக்கும் நிதியுதவியை பெறக்கூடாது எனும் கொள்கையை கடந்த 2013-ம் ஆண்டு உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, வெளிநாட்டு அரசுகளின் நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்ற கொள்கை காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் தனிப்பட்ட நிதியுதவியை மட்டுமே இந்திய அரசால் பெற்றுக்கொள்ள முடியும்.

    அதன் அடிப்படையில் தற்போது கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி, கத்தார் அறிவித்துள்ள ரூ.35 கோடி மற்றும் மாலத்தீவுகள் அறிவித்துள்ள ரூ.35 லட்சம் நிவாரண நிதியை அரசால் பெற்றுக்கொள்ள முடியாது.

    எனவே, கேரளாவிற்காக உதவ முன்வந்த அனைத்து நாடுகளையும் இந்திய அரசு பாராட்டுகிறது. தற்போதுள்ள கொள்கைகளின்படி உள்நாட்டில் திரட்டப்படும் நிதி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அளிக்கும் நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதிகளை திரட்டி கேரள வெள்ள பாதிப்பிற்கு நிவாரணமாக பயன்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்தார்.

    2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய மழை வெள்ள அழிவு ஏற்பட்டது. உடனே ரஷியா உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா, ரஷியாவிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை.

    2014-ம் ஆண்டு காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டபோது, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகள் உதவ போட்டி போட்டு முன் வந்தன. ஆனால் எந்த நாட்டின் உதவியையும் இந்தியா ஏற்கவில்லை. அந்த வரிசையில் இப்போதும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் உதவியை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaFloods
    கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக ரூ.35 லட்சம் வழங்கப்படும் என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது. #KeralaFlood
    மாலி :

    கேரள மாநிலத்தில் சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் தன்னார்வலர்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ரூ.35 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மாலத்தீவு அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறுகையில், இந்தியா எங்கள் நெருங்கிய அண்டை நாடாகும். இந்தியாவில் இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அது மாலத்தீவில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். தேவையான நேரங்களில் தோழமையோடு எங்களுடன் நின்ற இந்தியாவிற்கு மாலத்தீவின் சிறிய நன்கொடை இது என அவர் தெரிவித்தார். #KeralaFlood
    கனமழையால் தத்தளிக்கும் கேரள மாநிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #Kerala floods
    புதுடெல்லி :

    கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்தநிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், ‘கேரளாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி ரத்து செய்யப்படும்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்’. #Kerala floods
    கேரள மாநிலத்தை சின்னாபின்னப்படுத்தியுள்ள வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரண நிதியாக அசாம் மாநில அரசு ரூ.3 கோடி, மணிப்பூர் மாநில அரசு ரூ.2 கோடி அறித்துள்ளது. #KeralaReliefFund
    கவுகாத்தி :

    கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில், கேரள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புவர்களை ஒருங்கினைக்கும் தொலைத்தொடர்பு உதவி மையங்களை அமைக்கும்படி அம்மாநில பேரிடர் மீட்புத்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர் சர்பானந்தா சோனோவால், கேரளாவிற்கு ரூ.3 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரள மக்களுக்கு மணிப்பூர் மக்கள் துணை நிற்பார்கள் என கூறிய அம்மாநில முதல்வர் பிரென் சிங், நிவாரண நிதியாக ரூ.2 கோடி வழங்கப்படும் என கூறினார். 

    கனமழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaReliefFund
    கேரளாவில் கனமழை ஏற்படுத்திய சேதங்களுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். #AttorneyGeneralVenugopal #KeralaReliefFund
    புதுடெல்லி :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் கே.எம்.ஜோசப் உள்பட வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்ற வளாகத்தில் நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ரூ.1 கோடியை கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதியில் செலுத்தினார். அவரது மகனான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்னன் வேணுகோபால் ரூ.15 லட்சமும், மற்ற மூத்த வழக்கறிஞர்களான ஜெய்தீப் சிங் மற்றும் சந்தர் உதய் சிங் ஆகியோர் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக அளித்தனர்.

    மேலும், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சார்பாக அதன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் கேரளாவிற்கு வழங்கப்பட்டது. #AttorneyGeneralVenugopal #KeralaReliefFund
    ×