search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ரூ.700 கோடி நிதியுதவியை இந்தியா ஏற்க மறுப்பதற்கு காரணம் இது தான்...
    X

    ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய ரூ.700 கோடி நிதியுதவியை இந்தியா ஏற்க மறுப்பதற்கு காரணம் இது தான்...

    தற்போது நடைமுறையில் உள்ள வெளிநாட்டு கொள்கையின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய நிதியை பெற இயலாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #KeralaFloods
    புதுடெல்லி :

    கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை மாநிலத்தை நிர்மூலமாக்கியது.

    மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 370 பேர் மழைக்கு பலியானார்கள். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 3 லட்சம் விவசாயிகள், 45 ஆயிரத்து 988 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மண் மூடி சேதமானது.

    இப்படி மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று மாநில அரசின் முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

    இதற்கிடையே கேரள வெள்ளப்பாதிப்பை மத்திய அரசு தீவிர இயற்கை பேரிடர் ஆக அறிவித்துள்ளதால் பல வெளிநாடுகளும் கேரளத்திற்கு நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளன.

    வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவிகளை மத்திய அரசு வழியாகவே வாங்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரளா வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள வெளியுறவு கொள்கைகள் பிற நாடுகளின் அரசுகள் நேரடியாக அளிக்கும் நிவாரண நிதிகளை வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளார் ராவேஷ் குமார் கூறுகையில், ’பேரிடர் நிவாரண நிதியாக மற்ற நாட்டு அரசுகள் அளிக்கும் நிதியுதவியை பெறக்கூடாது எனும் கொள்கையை கடந்த 2013-ம் ஆண்டு உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, வெளிநாட்டு அரசுகளின் நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்ற கொள்கை காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் தனிப்பட்ட நிதியுதவியை மட்டுமே இந்திய அரசால் பெற்றுக்கொள்ள முடியும்.

    அதன் அடிப்படையில் தற்போது கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி, கத்தார் அறிவித்துள்ள ரூ.35 கோடி மற்றும் மாலத்தீவுகள் அறிவித்துள்ள ரூ.35 லட்சம் நிவாரண நிதியை அரசால் பெற்றுக்கொள்ள முடியாது.

    எனவே, கேரளாவிற்காக உதவ முன்வந்த அனைத்து நாடுகளையும் இந்திய அரசு பாராட்டுகிறது. தற்போதுள்ள கொள்கைகளின்படி உள்நாட்டில் திரட்டப்படும் நிதி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அளிக்கும் நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிதிகளை திரட்டி கேரள வெள்ள பாதிப்பிற்கு நிவாரணமாக பயன்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்தார்.

    2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய மழை வெள்ள அழிவு ஏற்பட்டது. உடனே ரஷியா உதவிகள் செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா, ரஷியாவிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை.

    2014-ம் ஆண்டு காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டபோது, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகள் உதவ போட்டி போட்டு முன் வந்தன. ஆனால் எந்த நாட்டின் உதவியையும் இந்தியா ஏற்கவில்லை. அந்த வரிசையில் இப்போதும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் உதவியை இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaFloods
    Next Story
    ×