search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூவம்"

    • தெருக்களிலும், வீடுகளை சுற்றியும் புகை அடிக்கப்படுகிறது.
    • தொடர் நடவடிக்கையின் மூலம் கொசுக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    இயற்கை மாற்றத்தால் சென்னையில் இந்த வருடம் கொசு உற்பத்தி பன்மடங்கு பெருகி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக ஜனவரி மாதத்தோடு கொசு உற்பத்தி குறைந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு மாநகராட்சி தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொண்ட போதிலும் கொத்து கொத்தாக பெருகி வருகிறது.

    ஆனாலும் சுகாதாரப் பணியாளர்கள் 200 வார்டுகளிலும் பகல் மற்றும் மாலை நேரங்களில் கடந்த 2 வாரமாக தீவிர கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் படகு மற்றும் டிரோன் மூலம் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் தெருக்களிலும், வீடுகளை சுற்றியும் புகை அடிக்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு பணி நகரம் முழுவதும் நடை பெற்று வருகின்றன. இதன்மூலம் ஓரளவுக்கு கொசுக்கடி குறைந்துள்ளது.

    பகல் நேரத்தில் கொசுக்கள் நடமாட்டம் இருந்ததால் 'ஏடிஸ்' வகை கொடுக்களாக இருக்கலாம் என கருதி வீடுகளை சுற்றி கொசுமருந்து, புகை அடிக் கப்பட்டன. இந்த வாரத்தில் இருந்து காலையில் நடை பெற்ற கொசு ஒழிப்பு பணி மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை நடக்கிறது. இதுதவிர கூவம் முகத்துவாரப்பகுதியிலும் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. கடல் நீரோடு கூவம் ஆற்றின் நீர் இணைவதற்கு மணல் திட்டுக்கள் தடையாக இருந்ததால் கொசு உற்பத்தி அதிகமானது. முகத்துவாரம் பகுதியில் கடலின் பெரிய அலையும், சிறிய அலையும் மாறி வரும் போது கடல்நீர் நேப்பியர் பாலம் முகத்து வாரம் மற்றும் அடையாறு முகத்துவாரம் பகுதியில் கூவம் நீருடன் இணையும்போது கூவம் ஆற்றில் உற்பத்தியாகக்கூடிய கொசுக்கள் அடித்து செல்லப்பட்டு அழிந்து விடுவது வழக்கம்.

    இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் முகத்துவாரப் பகுதியில் நடைபெற்றால் தான் சென்னையில் கொசுக்கள் உற்பத்தி குறையும். தற்போது அந்த பகுதியில் மண்மூடி இருந்ததால் வழக்கமான நிகழ்வு நடை பெறவில்லை. இதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியது.

    இதையடுத்து கூவம் முகத்துவாரப்பகுதிகளில் தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக கடல்நீரும், கூவம் நீரும் சேராததே கொசு உற்பத்திக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    தற்போது முகத்துவாரம் பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேப்பியர் பால அகலத்திற்கு அதாவது 500 மீட்டர் தூரத்துக்கு மண் திட்டுகள் அகற்றப்படுகிறது.

    கடலுக்குள் இறங்கி தண்ணீரை அகற்றி ஆழப்படுத்தும் நவீன எந்திரம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு சில நாட்களில் வருகிறது. அந்த எந்திரம் வந்தவுடன் முகத்துவாரம் பகுதியில் உள்ள மணல் பகுதிகள் அகற்றப்பட்டு கடல்நீரும் கூவம் நீரும் இணைய வழிவகை செய்யப்படுகிறது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை பூச்சியியல் அதிகாரி செல்வகுமார் கூறும்போது, 'தொடர் நடவடிக்கையின் மூலம் கொசுக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி இரவு நேரத்தில் கொசு மருந்து புகை அடிக்கப்படும். நேப்பியர், அடையாறு சீனிவாசபுரம் முகத்துவாரப் பகுதியில் தூர்வாரும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    நேப்பியர் முகத்துவாரப் பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஒ.டி. மேற்பார்வையில் இந்த பணி விரைவில் தொடங்கும்' என்றார்.

    ×