search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்சாதன சேமிப்பு கிடங்கு"

    • மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிர் தண்ணீரில் மூழ்கியது.
    • 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயர்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35 முதல் 40 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 80 கிலோ). இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சுமார் 3 லட்சம் மூட்டைகள் ஈரோடு சுற்றுவட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவை.

    இந்தியாவைப் பொருத்தவரை தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. அதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள் நிறமி (குர்குமின்) அளவு அதிகம். 3 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.

    இருமுறை பாலிஷ் செய்ய முடியும். பொன் நிறம், மஞ்சள் நிறம், வெளிர் பொன் நிறம் உள்ளிட்ட அனைத்து நிற மஞ்சள்களும் ஈரோட்டில் கிடைக்கும் என்பதால் இந்திய மஞ்சள் சந்தை விலை நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் சந்தையாக ஈரோடு சந்தை இருந்தது.

    தெலுங்கானா மாநிலத்துக்கு அடுத்து ஈரோட்டில்தான் மஞ்சள் ஏலம் அதிக அளவில் நடைபெறும். நாட்டிலேயே அதிக அளவில் மஞ்சள் விளையும் இடத்திலும், ஏலம் நடைபெறும் இடத்திலும் ஈரோடு இரண்டாம் இடத்தை வகித்து வந்தது. நீர்ப்பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஈரோட்டில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறையத் துவங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் 2015 இல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016 இல் 2,966 ஹெக்டேராக குறைந்தது, 2017 இல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018 இல் 5,625 ஹெக்டேராகவும், 2019 இல் 4,319 ஹெக்டேராகவும், 2020 இல் 4,100 ஹெக்டேராகவும், 2020 இல் 3,900 ஹெக்டேராகவும், 2021 இல் 3,850 ஹெக்டேராகவும், 2022 இல் 3,600 ஹெக்டேராகவும், 2023 இல் 3,500 ஹெக்டேராகவும் குறைந்துவிட்டது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அறுவடையின்போது பெய்த கன மழையால் மஞ்சள் பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த ஆண்டு அங்குள்ள சந்தைகளுக்கு தரமான மஞ்சள் வரவில்லை. இதனையடுத்து ஈரோடு மஞ்சளுக்கு தேவை அதிகரித்து இப்போது குவிண்டால் ரூ.13,000க்கும் மேல் விற்பனையாகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் மூட்டை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்படும் மஞ்சள் பூச்சி தாக்குதலால் தரம் குறைந்து விடுகிறது. இதனை தவிர்க்க, அரசு நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்பு மூலமாகவே குளிர்சாதன வசதி உள்ள மஞ்சள் சேமிப்புக் கிடங்குகளை ஈரோடு மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும் குளிர்சாதன மஞ்சள் சேமிப்புக் கிடங்கு அமைக்க முன்வரும் தனியாருக்கு மின்சார மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஞ்சள் விலை உயர்ந்துள்ள நிலையில் இப்போது விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் மஞ்சள் சாகுபடிக்கு தகுதியான நிலங்களில் ஏற்கனவே கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சாகுபடி செய்துள்ளதால் மஞ்சள் சாகுபடி செய்ய இயலாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திலேயே அறுவடை முடிந்து மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டதால் விதை மஞ்சள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் நிலையான மஞ்சள் சாகுபடி தொடர மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×